ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: ரவிசாஸ்திரி குழு விசாரிக்க எதிர்ப்பு!

ravi shastriஐ.பி.எல். சூதாட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சூதாட்டம் குறித்து முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே அறிக்கையை சமர்பித்து இருந்தது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட என்.சீனிவாசன் உள்பட 13 பேர் மீது விசாரணை நடத்த தனியாக குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் யார் இடம் பெறுவார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஷிவ்லால் யாதவ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த குழுவில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிசாஸ்திரி, கொல்கத்தா உயர் நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என்.பட்டேல், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேருக்குமே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கிரிக்கெட் வாரியத்தால் ஊதியம் பெறும் ரவிசாஸ்திரி விசாரணை குழுவில் இடம் பெறக்கூடாது என்று பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் ஆதித்யா வர்மா எதிர்ப்பு தெரிவித்தார்.

இதேபோல முன்னாள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருக்கும் ரவிசாஸ்திரி அந்த குழுவில் இருந்து விலக வேண்டும் என்றும், அவரது நேர்மை குறித்து தான் சந்தேகப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் அந்த குழுவில் உள்ள முன்னாள் நீதிபதி பட்டேவுக்கும் சரத்பவார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஷிவலால் யாதவின் உறவினரான அவர் எப்படி விசாரணை குழுவில் இடம் பெறமுடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் விசாரணை குழுவில் இடம் பெற்று இருப்பதற்கு ஐ.பி.எல். முன்னாள் கமிஷனர் லலித்மோடி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிளப்பில் ராகவன் செயலாளராக இருப்பதாக அவர் கூறி உள்ளார்.இதனால் ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று லலித்மோடி வலியுறுத்தி உள்ளார்.

கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட 3 பேருக்கும் கிரிக்கெட் வாரியத்தின் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதால் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் விசாரணை குழுவை சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று நடைபெறும் விசாரணையின்போது இதன் முடிவு தெரியவரும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top