சென்னை சுற்றுப்புற பகுதிகளில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 3 லட்சம் இளைஞர்கள் வேலை இழப்பு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கத்தை தொடர்ந்து கடந்த 41 நாட்களாக வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த 2-ம் தேதி மத்திய நிதித்துறை இணையமைச்சரை சந்தித்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தோம். நடப்பு கணக்கில் தினமும் ரூ. 2 லட்சமும், சேமிப்பு கணக்கில் ரூ. 50 ஆயிரமும் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

பணமில்லா பரிவர்த்தனைக்கு வியாபாரிகள் மாற, குக்கிராமம் தொடங்கி பெரிய நகரம் வரையுள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் அரசு சார்பில் பயிற்சி அளிக்க வேண்டும். ஸ்வைப்பிங் மெஷின்களை வியாபாரிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

நாட்டில் பல இடங்களில் கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்ட போதிலும், எந்த வியாபாரியிடம் இருந்தும் கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் நடவடிக்கையால் தமிழகத்தில் வியாபாரி களுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மின் கட்டணம், வாடகை கட்டணம் போன்றவை கொடுக்க முடியவில்லை. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மட்டும் நவம்பர் 30-ம் தேதியோடு சுமார் 3 லட்சம் இளைஞர்கள் வேலைகளில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள் நள்ளிரவு வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top