தேவநாகரி மொழியின் எண் வடிவங்களைப் பயன்படுத்த முடியாது; மதுரை உயர் நீதிமன்றம்

 

521442-rs-2000-notes-afp

 

அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட ரூ.2000 நோட்டுகளில் தேவநாகரி வடிவத்தில் எண்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த நோட்டுகளை மதிப்பிழக்க செய்யக் கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த அக்ரி கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிடும்போது, “ரிசர்வ் வங்கி குழு ரூ.2000 நோட்டு இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று வடிவமைத்துள்ளது. அந்த வடிவத்தில்தான் புதிய ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி மொழியின் தேவநாகரி வடிவத்தை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. விதிப்படியே ரூ.2000 நோட்டு வெளியிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது” என்றார்.

 

மனுதாரர் வழக்கறிஞர் வி.கண்ணன் வாதிடும்போது, “ரூபாய் நோட்டுகளில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எண் வடிவங்களை (1, 2, 3, 4..) மட்டுமே பயன் படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வேறு எண் வடிவங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு எந்த சட்டமும் கொண்டு வரப்படவில்லை. இதனால் ரூ.2000 நோட்டுகளில் தேவநாகரி எண் வடிவத்தைப் பயன்படுத்தியது சட்டவிரோதம்” என்றார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ரூபாய் நோட்டுகளில் இந்தி மொழியின் தேவநாகரி வடிவத்தை பயன்படுத்தலாம். ஆனால் தேவநாகரி மொழியின் எண் வடிவங்களைப் பயன்படுத்த முடியாது.

 

அப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் தனிச் சட்டம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி மொழியின் எண் வடிவம் இடம்பெறு வது தொடர்பாக சட்டமும், விதிகளும், சட்டத் திருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் எதன் அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி மொழியின் எண் வடிவம் இடம்பெற்றது? தற்போது புழக்கத்தில் விடப் பட்டுள்ள ரூ.2000 நோட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, திருத்தம் செய்து புதிய நோட்டுகளை வெளியிடச் செய்யலாம்” என்றனர்.

 

இதையடுத்து, “ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறத் தேவையில்லை. விதிப்படிதான் புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசிடம் பெற்று தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” என உதவி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். பின்னர், விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி மொழியின் எண் வடிவம் இடம்பெறுவது தொடர்பாக சட்டமும், விதிகளும், சட்டத்திருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top