புகுஷிமாவை தாக்கியது சுனாமி; ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 

sipa-sipausa-3122964-jpg_2759901_660x281

புகுஷிமா அணு உலை அருகே கடல் பகுதியில் 10 கி.மீ ஆழத்தை மையமாக கொண்டு நேற்று அதிகாலை 5.59 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான இந்த பூகம்பம் தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கிய தால் பொதுமக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.

பூகம்பத்தை தொடர்ந்து புகுஷிமாவின் வடக்கே 70 கி.மீ தொலைவில் உள்ள செண்டாய் என்ற இடத்தில் 4.5 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்தன. துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் நடுக்கடலுக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

அதே சமயம் சுனாமி பீதி தணிந்துவிட்டதாக ஹவாய் தீவில் செயல்படும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. எனினும் அடுத்த சில மணி நேரங்களுக்கு ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் கடல் மட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும் என தெரிவித்தது.

இதற்கிடையே சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானில் உள்ள அனைத்து அணு மின் உலைகளும் உடனடியாக மூடப்பட்டன. 2011-ல் பூகம்பத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணு மின் உலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் கதிர்வீச்சுகள் கடலிலும், காற்றிலும் கலந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு மின் உலைகளின் இயக்கம் அடியோடு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புகுஷிமா அணு மின் நிலையத்துக்குள் லேசான அளவில் சுனாமி அலைகள் தாக்கியதால் அதன் குளிரூட்டும் தளத்தில் உள்ள அணு எரிபொருள் கலனில் சிறிய பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் இதனால் பாதிப்பு ஏற்படாது என்றும் சுனாமி அபாயம் நீங்கியதும், மீண்டும் குளிரூட்டும் தளம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகுஷிமாவை ஒட்டிய கடலோர பகுதிகளில் வசிக்கும் சுமார் 3,000 பேர் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஜப்பானைத் தொடர்ந்து நியூசிலாந்தின் கடலோர பகுதிகளிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் வெலிங்டனில் இருந்து 200 கி.மீ தொலைவில் வடகிழக்கு திசையில் மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top