விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய எஸ்பிஐ-க்கு துப்புரவுத் தொழிலாளி கடிதம்

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய வேண்டுமென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, விஜய் மல்லையா உள்பட பலர் நீண்டகாலமாக செலுத்தாமல் இருந்த ரூ.7,000 கோடி கடன் தொகையை வங்கிப் பதிவேடுகளில் இருந்து எஸ்பிஐ எடுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இதில் மல்லையாவின் கடன் மட்டும் ரூ.1,200 கோடியாகும்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதற்கு விளக்கமளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “மல்லையா உள்பட எவரது கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. கடனைத் திரும்பப் பெற சட்டரீதியாக நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. வங்கிப் பதிவேட்டில் இருந்து கடனை நீக்குதல் என்பதற்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று அர்த்தமல்ல’ என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாநகராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவுத் தொழிலாளி பாவுராவ் சோனாவானே, தான் கடன் பெற்றுள்ள எஸ்பிஐ வங்கிக் கிளை மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மல்லையாவின் கடனை ரத்து செய்த அதே பாணியில் எனது கடனையும் ரத்து செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார்.
இது தொடர்பாக பாவுராவ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மல்லையாவின் கடனை ரத்து செய்ததற்காக எஸ்பிஐ-க்கு அக்கடிதத்தில் முதலில் பாராட்டு தெரிவித்துள்ளேன். நானும் எனது மகனின் மருத்துவச் செலவுக்காக ரூ.1.5 லட்சத்தை எஸ்பிஐ-யில் இருந்து கடனாக வாங்கியுள்ளேன். மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்த அதே பாணியில் எனது கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளேன். வங்கி மேலாளரிடம் இருந்து எனக்கு இதுவரை பதில் வரவில்லை என்றார் அவர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top