தமிழ்நாட்டில் பருவமழை போதிய அளவு பெய்யாதது ஏன்?: வானிலை அதிகாரிகள் விளக்கம்

201611170755302558_weather-officials-description-why-not-sufficient-monsoon-in_secvpf

தென்மேற்கு பருவமழை முடிவடைந்து அக்டோபர் 30-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தாமதமாக தொடங்கியபோதிலும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மட்டுமே பெய்து வருகிறது.

பருவமழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழைக்கு பதிலாக பல்வேறு மாவட்டங்களில் பனி பெய்து குளிர் அடிக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பி.தம்பி கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும் கனமழை பெய்யவில்லை. இது போல முன்பும் இருந்து இருக்கிறது. மழை பெய்யவேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். அடுத்த 5 நாட்கள் வரை பெரிய அளவில் மழை இல்லை.

இதுவரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 68 சதவீதம் குறைவாகத்தான் பெய்துள்ளது. நீண்டகால வானிலை அறிக்கையின்படி (இயல்பான அளவு) மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வடகிழக்கு பருவமழை இதுவரை சரியாக பெய்யாததற்கு காரணம் என்ன? என்று வானிலை அதிகாரிகள் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் மழை மேகம் இருந்தும் ஈரப்பதம் இல்லாததால் கனமழை பெய்யவில்லை. மாறாக சமீபத்தில் குறைந்தழுத்த தாழ்வுநிலை அந்தமான் அருகே உருவாகி அது தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்து, மியான்மர் வழியாக சென்றது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடல் பகுதியில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துச்சென்றுவிட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இன்றைய வானிலை குறித்து நேற்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

கன்னியாகுமரி அருகே உருவான குறைந்தழுத்த தாழ்வுநிலை அரபிக்கடல் பகுதியில் அதே இடத்தில் நீடிக்கிறது. தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு, சென்னை நுங்கம்பாக்கம் தலா 2 செ.மீ., சேரன்மகாதேவி, சீர்காழி, தூத்துக்குடி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top