புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் இந்தியை திணிப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

புதிய 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் இந்தியை திணிப்பதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கருப்பு பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிப்பதாகக் கூறி 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த அறிவிப்பால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பதற்றத்தையும், பரபரப்பையும் பயன்படுத்தி கொண்டு புதிய 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் இந்தியை திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒருகட்டமாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக இடம் பெறும் பன்னாட்டு எண் வடிவத்துடன், கூடுதலாக தேவநாகரி வடிவத்திலும் 2,000, 500 ஆகிய எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம்பெற்றதில்லை.

இப்போது தான் முதல் முறையாக ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன இதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை; அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்படவில்லை. மாறாக, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மத்திய அரசே தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டுகள் வரை தேவநாகரி எண்களை பயன்படுத்தக் கூடாது; அதன்பிறகு அந்த எண்களை பயன்படுத்த வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், நினைவுக்குத் தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளில் அத்தகைய சட்டம் எதுவும் கொண்டுவரப்படாத 

அதுமட்டுமின்றி, புதிய நோட்டுகளில் தூய்மை இந்தியா இலச்சினையை பதித்துள்ள மத்திய அரசு, அதில் ‘தூய்மை இந்தியா தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி’ என்ற முழக்கத்தை இந்தி மொழியில் மட்டும் இடம்பெறச் செய்திருக்கிறது. இந்தி பேசாத மக்கள் மீது பல்வேறு வழிகளில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க முயன்று தோல்வியடைந்த மத்திய அரசு, இப்போது ரூபாய் தாள்களின் மூலமாக இந்தியையும், தேவநாகரி வடிவ எண்களையும் அறிமுகப்படுத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

புதிய ரூபாய் நோட்டுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை என்பதால், அவற்றை அச்சிடுவதை நிறுத்தி, தேவநாகரி எழுத்துக்களும், தூய்மை இந்தியா இலச்சினையும் நீக்கப்பட்ட புதிய நோட்டுகளை அச்சிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top