ரூ.500, 1,000 நோட்டுகள் தடை விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கேவியட் மனுதாக்கல்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு 15-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி 8-ந் தேதி இரவு திடீரென அறிவித்தார். இதை எதிர்த்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் சங்கம்லால் பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார்.

அதில், மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் பணபரிவர்த்தனை வெகுவாக முடங்கி உள்ளது. ஆஸ்பத்திரிகளில் கூட அந்த பணத்தை வாங்க மறுக்கின்றனர். வெளியூர்களில் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் செல்லாத அந்த நோட்டுகளை வைத்துக்கொண்டு அல்லாடுகின்றனர். வியாபாரிகள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதேபோல் டெல்லியை சேர்ந்த வக்கீல் விவேக் நாராயணனும் நேற்று முன்தினம் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதில் குறைவான நேரத்தில் மத்திய அரசு அறிவித்த இந்த திடீர் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அல்லது மக்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்து இருந்தது. அதில், மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கில் தங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் வழங்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்து. இந்த வழக்கை நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான அமர்வு 15-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தது.

இதனிடையே மும்பை ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஜம்சத் மிஸ்ட்ரி, ஜப்பார் சிங் ஆகியோர் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2-ந் தேதி ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் இன்னும் 15 நாட்களுக்குள் அனைத்து ஏ.டி.எம். எந்திரங்களிலும் ரூ.100 நோட்டுகளை அதிக அளவில் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. ஆனால் அதற்குள் 8-ந் தேதி இரவு 8 மணிக்கு அவசரமாக அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ரூ500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்துள்ளார். முறையாக அரசிதழில் கூட இந்த உத்தரவு வெளியிடப்படவில்லை. எந்த காலக்கெடுவும் விதிக்காமல் அவசரமாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என்று குறிப்பிட்டனர்.

இந்த மனுவை ஏற்க மும்பை விடுமுறை கால கோர்ட்டு நீதிபதி கார்னிக் மறுத்து விட்டார். மேலும் 15-ந் தேதிக்கு மேல் முதன்மை அமர்வில் மனுதாக்கல் செய்யுமாறு அவர் உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top