நெல்லையில் 100 ரூபாய் தட்டுப்பாடு: பணம் வாங்காமல் உணவு வழங்கிய ஹோட்டல்!

00 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, திருநெல்வேலியில் ஒரு ஹோட்டலில் பணம் பெறாமல் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, 2 தினங்களாக பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறினர். உணவகங்களுக்குச் சென்றால் என்ன சாப்பிடுகிறீர்கள் என்ற நிலை மாறி, சில்லறை இருந்தால் சாப்பிடலாம் எனச் சொல்லும் நிலை ஏற்பட்டது. வியாழக்கிழமை வங்கிகளில் பணம் மாற்றியபோதிலும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், திருநெல்வேலி ஒரு ஹோட்டலில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெறவில்லை. அதே நேரத்தில் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை உணவருந்திச் செல்லலாம் என நிர்வாகம் அறிவித்தது.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஸ்ரீ பாலாஜி ஹோட்டல் நிர்வாகம்தான்
இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஹோட்டலில் மட்டுமன்றி அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களிலும் இதுகுறித்த அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, புதன், வியாழக்கிழமைகளில் ஹோட்டலுக்கு பணம் இல்லாமல் வந்தவர்களுக்கு உணவும் பரிமாறப்பட்டது.
சில்லறை கிடைக்காமல் அவதிக்கு ஆளான ஏராளமானோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உணவு சாப்பிட்டுச் சென்றனர்.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் கோவிந்தன் கூறியது: திடீரென 500, 1000 ரூபாய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மேலும் ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
பையில் பணம் இருந்தாலும், அப்பணத்தை யாரும் வாங்காததால் செலவு செய்ய முடியாத நிலைமை உருவானது. மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உணவு சாப்பிட முடியாமல் சிரமப்படுவதை அறிந்து இந்த உதவியைச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
உணவு அருந்துபவர்கள் சில்லறை பணம் இருந்தால் கொடுக்கலாம். இல்லாவிட்டாலும் உணவு சாப்பிட்டுச் செல்லலாம். புதிய ரூபாய் நோட்டுகள் எப்போது கிடைக்கிறதோ அப்போது வந்து கொடுக்கலாம் என முடிவு செய்து உதவினோம். 2 தினங்களில் 500-க்கும் மேற்பட்டோர் உணவருந்தினர். வெள்ளிக்கிழமையும் புதிய ரூபாய் நோட்டுகள், சில்லறை பணம் கிடைக்காத நிலையில் உணவு வழங்கப்படும் என்றார் அவர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top