கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார்.
அத்துடன் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்படும் என்று அப்போது கூறிய அவர், செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை 10–ந் தேதி முதல் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டன.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று காலையில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இன்று முதல் எடி.எம்.கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், மக்கள் ஆர்வத்துடன் இன்று காலை முதல் ஏடி.எம் முன் காத்திருந்தனர். இருப்பினும் நாடு முழுவதும் வெறும் 10 சதவீத ஏடி.எம் கள் மட்டுமே திறந்து இருந்தன. திறந்து இருந்த பெரும்பாலான ஏடி.எம் களிலும் பணம் காலியானதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நாட்டின் பெரும் நகரங்களில் உள்ள பல ஏடி.எம்கள் இன்று செயல்படாமலே இருந்தன. ஏறக்குறைய 2,20000 ஏடி.எம். மையங்களுக்கு பணம் நிரப்ப வெறும் 8,800 வாகனங்களும் 35 ஆயிரம் ஊழியர்களும் மட்டுமே இருப்பதால், இந்த சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஏடி.எம்களில் 15-20 லட்சம் வரை பணம் நிரப்ப முடியும். ஆனால்,100 ரூபாய் நோட்டுக்களுக்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளதால், 2 லட்சம் வரை மட்டுமே நிரப்ப முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.