வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை 3 மாதங்கள் பெய்வது வழக்கம். இந்த மழை மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவை 70 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பருவமழை தற்போது தொடங்கி உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள முக்கியமான 15 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயரவில்லை.

அதேபோன்று சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை.

தமிழக அணைகள்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மணிமுத்தாறு, பாபநாசம், வைகை மற்றும் அமராவதி, சோலையாறு போன்ற அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் இந்த அணைகளில் போதிய தண்ணீர் வருகிறது.

இருந்தாலும் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சோலையாறு, பரம்பிக்குளம், திருமூர்த்தி ஆகிய அணைகளில் நீர் மட்டம் 50 அடிக்கும் கீழே தான் இருந்து வருகிறது. இதன் மூலம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு முழுமையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.

எதிர்பார்த்த மழை இல்லை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரிகள் உள்ள பகுதியிலும் குறைந்த அளவே மழை பெய்துள்ளதால் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. இருந்தாலும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கிருஷ்ணா நீர் பெறப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அனைத்து அணைகளிலும் ஓரிரு நாட்களில் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் கண்டலேறு நீர்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்படும் நீர் மூலம் நிலமை ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் முழுமையாக குடிநீர் தேவைக்கு வடகிழக்கு பருவமழையையே நம்பி இருக்கிறோம்.

மழைநீர் சேகரிப்பு

சென்னை மாநகரில் சராசரி மழையளவு 1 சதுர அடியில் 1 ஆண்டுக்கு கிடைக்கப்பெறும் மழையின் அளவு 113 லிட்டர். இதேபோல் 2 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவுள்ள வீட்டுமனையில் பெய்யும் மழையின் அளவு 2 லட்சத்து 71 ஆயிரத்து 200 லிட்டர். இதில் பூமிக்குள் செலுத்தக்கூடிய மழைநீரின் அளவு 60 சதவீதம். இந்த அளவில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 720 லிட்டர் மழைநீர் சேகரிப்பின் மூலம் திரும்ப பூமிக்குள் செலுத்தி ஈடுகட்டுவதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை எளிதில் தவிர்க்க முடியும்.

நிலத்தடி நீர்மட்டம் குறைவதையும் தடுக்கலாம். வடகிழக்கு பருவ மழையினால் கிடைக்கும் நீரை வீணாகக் கடலில் கலக்கவிடாமல், கணிசமான அளவு நிலத்தடி நீரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கட்டிடங்கள் மூலம் நீர் சேமிப்பு

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பெருமுயற்சியால் சென்னையில் மழைநீர் சேகரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டமைப்புகள், உருவாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மழைநீர் சேகரிப்பில் சென்னை ஒரு முன்னோடி மாநகரமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை மூலம் பெறப்படும் மழைநீரை சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், வருவாய்த்துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட 32 அரசு துறைகளுக்கான கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பொதுப்பணித்துறை அமைத்து பராமரித்து வருகிறது.

கடந்த 2014–2015–ம் ஆண்டு 23 ஆயிரத்து 343 கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் பழுது நீக்கப்பட்டன. அத்துடன் 2 ஆயிரத்து 71 கட்டிடங்களில் புதிதாக மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. அதேபோல் 2015–2016–ம் ஆண்டுகளிலும் சுமார் 3 ஆயிரம் கட்டிடங்களுக்கு புதிதாக மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் இந்த ஆண்டு மழை நீர் அதிகம் சேகரிக்கப்பட்டு, நிலத்தில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு விபரம்

எண் அணையின் பெயர் கொள்ளளவு நேற்றைய மழை அளவு அடியில் நீர்மட்டம் (மில்லிமீட்டர்)

1. மேட்டூர் 120 43.58 –

2. பவானிசாகர் 105 44.28 –

3. அமராவதி 110 39.90 6

4. பெரியார் 152 110 –

5. வைகை 71 23.39 8.8

6. பாபநாசம் 143 29.70 15

7. மணிமுத்தாறு 118 34.37 1

8. பேச்சிப்பாறை 48 13.20 15.2

9. பெருஞ்சாணி 77 23.75 47.2

10. கிருஷ்ணகிரி 52 46.35 –

11. சாத்தனூர் 119 92.10 –

12. சோலையாறு 160 23.22 17

13. பரம்பிக்குளம் 72 29.85 –

14. ஆழியாறு 120 68.40 –

15. திருமூர்த்தி 60 49.63 –

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு

ஏரிகள் மொத்த கொள்ளளவு நேற்றைய கடந்த ஆண்டு

நிலவரம் நிலவரம்

பூண்டி 3231 250 77

சோழவரம் 881 78 16

செங்குன்றம் 3,300 440 46

செம்பரம்பாக்கம் 3,645 517 254

வீராணம் 1,456 – 958


மொத்தம் 12,513 1,285 1,343


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top