பாளையங்கோட்டையில் பழைய நாணயம், தபால் தலை கண்காட்சி தொடங்கியது

பாளையங்கோட்டையில் பழைய நாணயம், தபால் தலை, கலைப்பொருட்களின் கண்காட்சி நேற்று தொடங்கியது.

in-playankottaiold-coin-stamp-exhibition-began_secvpf

நெல்லை நாணயம், தபால் தலை, கலைப்பொருட்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 3 நாட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கடலோர பாதுகாப்பு படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். செல்லப்பன் முன்னிலை வகித்தார். ஜான்வெள்ளக்கண் வரவேற்று பேசினார்.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகர், மாவட்ட நூலக தலைமை அதிகாரி மந்திரம், அறிவியல் மைய அலுவலர் நவராம்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கண்காட்சி நடந்தது. மொத்தம் 30–க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. சேரன், சோழன், பாண்டியர்கள், நாயக்கர்கள், நவாப், விஜயநகரம், திருவிதாங்கூர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், அரிய வகையான ஓலைச்சுவடிகள், நூல்கள், ஏடுகள், இசைக்கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.

தினத்தந்தி செய்தி

“தினத்தந்தி“ பத்திரிகையில் 17–6–1943–ம் ஆண்டு வெளியான செய்தி மற்றும் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாக செய்திகளும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. அரிய தபால் தலைகள், தபால் கவர்கள், கற்காலம் முதல் இன்று வரை உள்ள அரிய கலை பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன.

சீனா, ஜப்பான் நாடுகளில் புகழ் பெற்ற “போன்சாய்“ கலை மரங்கள், பழைய ரூபாய் நோட்டுகள், அரிய வகையான சித்திரங்களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.

ஆர்வமாக பார்த்தனர்

கண்காட்சியை மாணவ–மாணவிகள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர். ஒவ்வொரு பொருட்களையும் எடுத்து எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்ற அங்குள்ளவர்களிடம் விளக்கம் கேட்டனர். நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) கண்காட்சி நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை தபால் தலை சேகரிப்போர் சங்க தலைவர் நோபிள்ராஜ், செயலாளர் ஜெபின், ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top