மீனவர்கள் பிரச்னை:மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா

இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்திய மீனவர்கள் விவகாரத்தில் அவர்களுக்குள்ளாகவே தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறி தனது பொறுப்புகளை மத்திய அரசு தட்டிக் கழிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
இந்தியா – இலங்கை மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை தில்லியில் எந்தப் பின்னணியில், யாருடைய ஏற்பாட்டின்பேரில் நடத்தப்படுகிறது என்பதை இதுவரை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை. நீண்ட காலமாக இரு நாட்டு மீனவர்களிடையே மீன் பிடித்தல் தொடர்பாக பிரச்னை நிலவி வருகிறது.
1974-இல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகுதான் இந்த விவகாரம் தீவிரம் அடைந்தது. கச்சத்தீவு உடன்பாட்டுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் அளிக்கவில்லை.
கடந்த காலங்களிலும் இந்தியா-இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அவற்றால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இத்தகைய கூட்டங்கள் வழக்கமான நிகழ்வாகி விடக் கூடாது.
இந்திய மீனவர்களை கைது செய்யவும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யவும் இலங்கை கடற்படைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இலங்கை கடற்படைக்கு அழுத்தம் கொடுப்பது அந்நாட்டில் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் உள்ள அரசியல் கட்சிகள்தான்.
இந்த விஷயத்தை அரசியல் ரீதியில் அணுகினால்தான் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதற்கு அடிப்படையாக கச்சத்தீவை மீட்க வேண்டும். அதன் பிறகு மீனவர்கள் விவகாரத்தில் இரு தரப்பு கடற்படையின் தலையீட்டைத் தவிர்க்க வேண்டும். இரு நாட்டு அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்திய-இலங்கை மீனவர்கள் இடையே இணக்கம் காண உதவ வேண்டும். இது ஏதோ மீனவர்கள் சார்ந்த பிரச்னை என்று கூறி தனது பொறுப்புகளை மத்திய அரசு தட்டிக் கழிக்கக் கூடாது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top