அவுரங்காபாத்தில் தீ விபத்து: 150 பட்டாசு கடைகள், 30 வாகனங்கள் எரிந்து கருகின

201610292116174638_aurangabad-fire-150-crackers-shops-30-vehicles-burned_secvpf

அவுரங்காபாத்தில் உள்ள அவுரங்கபூரா பகுதியில் ஜில்லாபரிஷத் மைதானம் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்று இங்கு 150 பேர் பட்டாசு விற்பனை கடை வைத்திருந்தனர்.  இன்று ஏராளமானவர்கள் பட்டாசு வாங்கி கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் மின்கசிவு காரணமாக ஒரு பட்டாசு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்வயரில் இருந்து பறந்த தீப்பொறி பட்டாசுகள் மீது விழுந்தன.

இதைப்பார்த்து பதறிப்போன கடைக்காரர் மற்ற கடைக்காரர்களையும் எச்சரித்தபடி அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் மற்றும் பட்டாசு வாங்க வந்தவர்களும் நாலாபுறம் சிதறி ஓடினார்கள்.

அடுத்த சில நொடிகளில் கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. தீ மைதானத்தில் உள்ள 150 கடைகளும் மளமளவென் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இந்த பயங்கர விபத்தில் பட்டாசு வாங்க வந்திருந்தவர்களின் வாகனங்கள் தீயில் சிக்கிக்கொண்டன. மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன. கரும்புகை சூழ்ந்து அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

தகவல் அறிந்து 10 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள்.

இருப்பினும் அவர்களால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அனைத்து பட்டாசு கடைகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின். தீயில் எரிந்த நிலையில் 30 கார், மோட்டார் சைக்கிள்கள் காட்சி அளித்தன.

அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கர தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top