பல்லாவரத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதி எது? தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பல்லாவரத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதி எது? என்பதை ஆய்வு செய்து, அதன் விவரங்களை பட்டியலாக தாக்கல் செய்யும்படி தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஆர்.எம்.பாவேந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

பழமையான நினைவு சின்னங்களை பாதுகாக்கும் வகையில், சென்னை மற்றும் புறநகரில் 32 இடங்களை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. இதனால் ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், பெருங்களந்தூர், வண்டலூர், பெரும்பாக்கம், நெடுங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட தூரம் வரை புதிய கட்டுமானங்கள் கட்ட கடந்த 2010–ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை புதிய கட்டுமானங்கள் கட்டவும், ஏற்கனவே உள்ள கட்டிடங்களை பழுது பார்க்கவும் நிரந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 101 மீட்டரில் இருந்து 300 மீட்டர் வரையில் உள்ள இடங்களில் தொல்லியல் துறை வழங்கும் தடையில்லா சான்றிதழின் அடிப்படையில் கட்டிடம் கட்ட திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. பல்லாவரத்தில் உள்ள சுபம் நகரில் என்னுடைய வீட்டு மனை உள்ளது. இந்த பகுதி, தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதி இல்லை.

ஆனால், இந்த இடத்தில் வீடு கட்ட பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. விதிமுறைகளை ஆய்வு செய்யாமல், அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக அனுமதி வழங்க மறுக்கின்றனர். எனவே, எனது இடத்தில் வீடு கட்ட அனுமதி வழங்க நகராட்சிக்கு உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘தொல்லியல் துறையின் தடைசெய்யப்பட்ட பகுதி எவை?, 101 மீட்டரில் இருந்து 300 மீட்டருக்கு இடைப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதி எவை? என்பதை தொல்லியல் துறை அளவீடு செய்து, அந்த விவர பட்டியலை வருகிற நவம்பர் 5–ந் தேதிக்குள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.

இந்த பணியை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையிட்டு, தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 21–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top