தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 1-ந்தேதி முதல் அமல்; விலை இல்லா அரிசியும் வழங்க முடிவு

’’தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும்’’ என்று, தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.  ரேஷன் கார்டுகளுக்கு விலை இல்லா அரிசி தொடர்ந்து வழங்குவதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தினை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்துமாறும், அவ்வாறு அமல்படுத்த தவறினால் தற்போது வறுமை கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கென வழங்கப்படும் அரிசியின் விலையினை கிலோ ஒன்றுக்கு ரூ.8.30 என்பதிற்கு பதிலாக ரூ.22.54 என்ற விலையில் மட்டுமே வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்தும் போது, தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 50.55 சதவீத மக்கள் மட்டுமே அரிசி பெற தகுதி உடையவர்களாக இருப்பர்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தமிழகத்திற்கு ஏற்பட உள்ள பாதகங்களை நன்கு உணர்ந்து, மத்திய அரசின் சட்டம் எவ்வாறாக இருந்தாலும், தமிழக மக்களின் நலன் கருதி, தமிழகத்திற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற போதிலும், தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொதுவினியோக திட்டத்தில் உள்ள ‘அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான’ (ரேஷன் கார்டுதாரர்கள்) அரிசி ஒதுக்கீடு தொடர்ந்து குறைவேதுமின்றி வழங்கப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியதன் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 1.11.2016 முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தும் போதும், தற்போது தமிழ்நாடு அரசால் பாகுபாடின்றி ‘அரிசி’ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும்.

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இருந்தால், மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும். ஆனாலும், தமிழக அரசு தற்போது ஒரு நபர் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 12 கிலோ அளவில் வழங்கப்பட்டு வரும் அரிசியினை தொடர்ந்து வழங்கும்.

* ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்கள் இருந்தால் மேற்படி சட்டத்தின்படி மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும் என்ற போதிலும், தமிழக அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் 16 கிலோ அரிசியே தொடர்ந்து வழங்கப்படும்.

* மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்று தற்போது நடைமுறையில் உள்ள உச்சவரம்பின்றி ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ வீதம் உச்சவரம்பின்றி வழங்கப்படும். (உதாரணமாக 5 உறுப்பினர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 20 கிலோ அரிசி என்பதற்கு பதிலாக இனிமேல் 25 கிலோ அரிசி வழங்கப்படும். அதே போல ஒரு குடும்பத்தில் 7 உறுப்பினர்கள் இருந்தால் அவர்களுக்கு 35 கிலோ அரிசியும், 10 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு 50 கிலோ அரிசியும் வழங்கப்படும்)

* அந்தியோதியோ அன்னயோஜனா திட்டப் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும்.

* மேற்படி சட்டத்தை செயல்படுத்துவதாலும், தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது விநினியோகத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்துவதாலும், தமிழக அரசிற்கு வருடத்திற்கு சுமார் ரூ.1,193.30 கோடி கூடுதல் செலவாகும்.

இதனால் அரசிற்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டாலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் தொடர்ந்து பயன்பெறும் வகையில் இச்சட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட ஆணையிடப்பட்டுள்ள இந்த உணவு பாதுகாப்பு சட்டம், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை வழங்கும் ஒரு சிறப்பான திட்டமாக இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் செயல்படுத்தப்படாத ஒரு சிறப்பான திட்டமாக அமையும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top