தனியார் சர்க்கரை ஆலைகளுக்குள் சென்று முற்றுகை போராட்டம்; கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே கொடுக்க வலியுறுத்தி கடந்த 25–ந்தேதி சென்னையில் கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சர்க்கரை துறை கமிஷனர் மகேசன் காசிராஜன் ஆகியோரை சந்தித்து பேசுவதற்காக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவரும், சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேற்று தலைமைச் செயலகம் வந்தனர்.

அமைச்சர் எம்.சி.சம்பத், சர்க்கரை துறை கமிஷனர் மகேசன் காசிராஜன் ஆகியோரை சந்தித்து பேசிய அவர்கள், பின்னர் தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். முன்னதாக, கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள், மத்திய–மாநில அரசுகளின் பரிந்துரைகளை ஏற்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி பாக்கி தொகையையும் வழங்காமல் இருந்து வருகிறது. எனவே, இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்கக்கோரி கடந்த 25–ந்தேதி சென்னையில் கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி கைதானோம். அன்று இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தோம்.

தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்க்கரை துறை கமிஷனர் அழைப்பு விடுத்தார். அந்த வகையில், இன்று (நேற்று) தொழில் துறை அமைச்சர், சர்க்கரை துறை கமிஷனர் ஆகியோரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளோம்.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவர்களும், அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். சர்க்கரை ஆலை முதலாளிகளையும், கரும்பு விவசாயிகளையும் ஒன்றாக அழைத்து பேசி, நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கும் மாறும் வலியுறுத்தியுள்ளோம்.

தீபாவளி பண்டிகை வருகிறது. அதற்கு முன்னதாக நிலுவைத் தொகையின் ஒரு பகுதியையாவது கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், இனி சென்னையில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மாட்டோம். பாக்கி வைத்துள்ள தனியார் ஆலைகளுக்குள்ளேயே சென்று முற்றுகை போராட்டம் நடத்துவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top