உச்ச நீதிமன்றம் காவிரி மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க முடியுமா? வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவு

காவிரி நடுவர் மன்றம் 2007–ம் ஆண்டில் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த தீர்ப்பில் விளக்கம்கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன. மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மேலும் மாநிலங்கள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

 

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் தொடர்ந்த காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இதனிடையே காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அவ்வப்போது இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.என்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான‌ அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும்போது, “கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சினையை 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ல் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 262-ம் பிரிவு மற்றும் 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு சட்டத்துக்கு எதிரானது. நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்க்கும் மாநில அரசுகளின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை. எனவே காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மாநில அரசுகளின் மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல”என்றார்.

கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃ பாலி எஸ். நாரிமன் வாதிடும்போது, “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது. மாநில அரசுகளின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் உள்ளது. இந்திய அரசியல‌மைப்பு சட்டத்தின் 136-வது பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கிய அதிகாரத்தின்படி இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்கலாம். மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்க உச்ச நீதிமன்றத்தை காட்டிலும் பலம் வாய்ந்த அமைப்பு எதுவும் இல்லை” என்றார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டேவும் மத்திய அரசின் வாதத்தை ஏற்கக் கூடாது என்றார்.

“காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது. 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு சட்டப் பிரிவு 6 (2) ன் கீழ் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்றார் அவர்.

இதேபோல் கேரள அரசும் வாதிட்டது. ஆனால் புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு ஆதரவாக வாதிட்டது. “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கக் கூடாது” என வாதிட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான‌ மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது தொடர்பாக கர்நாடகா, தமிழக‌ம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் வரும் திங்கள்கிழமைக்குள் (அக். 24) எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கில் மறுதீர்ப்பு வரும் வரை 18-ம் தேதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு 2000 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும்” என உத்தரவிட்டனர். இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top