கூடங்குளம் அணுஉலை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்து வழக்கு;பசுமை தீர்ப்பாயத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுஉலை பூங்கா வளாகத்தில் அமைய உள்ள 3 மற்றும் 4–வது அலகு மற்றும் 5 மற்றும் 6–வது அலகுகள் அமைப்பதற்கு, கடந்த 2012–ம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த அனுமதியை எதிர்த்து ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2012–ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அணுஉலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை தயார் செய்ய, 4 அலகுகளுக்கும் தகுதியற்ற ஒரு தனியார் நிறுவனம் செய்த ஆய்வின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது. எனவே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் மீதான இறுதி வாதம் நேற்று நீதிபதி எஸ்.பி.ஜோதிமணி மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் முன்னிலையில் நடந்தது.

இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து மனுதாரர் தரப்பு வக்கீல் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள 3, 4 மற்றும் 5 மற்றும் 6 ஆகிய அலகுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதம் நிறைவடைந்து உள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அனுமதி என்பதால், நீதிபதிகள், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடுவார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top