மணிப்பூரில் புதிய கட்சியை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா: தேர்தலில் போட்டியிட முடிவு

மணிப்பூரில் சமூக ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கியது முதல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக ஆளும் கட்சியால்  கைது செய்யப்படுவதும் பின்னர் விடுதலை ஆவதுமாக இருந்தார்.

irome

இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டு நேரிடையாக அரசியல் களத்தில் இறங்க முடிவு செய்தார் ஐரோம் ஷர்மிளா. பின்னர் அவருக்கு இம்பால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் விடுதலையான ஐரோம் ஷர்மிளா, அரசியலில் இணைந்து மணிப்பூர் அரசியலில்  மக்களோடு சேர்ந்து பணியாற்ற  விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய நேரிடையாக பாராளுமன்ற  ஜனநாயக வழியில் இறங்கி எதிர்கொள்வோம் என  தெரிவித்தார்.
இந்நிலையில், தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து அவரை முற்றிலுமாக விடுவித்து இம்பால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இனி ஐரோம் ஷர்மிளா சுதந்திரமாக செயல்படலாம் என்று நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐரோம் ஷர்மிளா, புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும், தனது கட்சி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதற்கு தீவிரமாக போராடும் என்றும் கூறினார்.

அதன்படி இம்பாலில் இன்று புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா. கட்சியின் பெயர் மக்கள் எழுச்சி நீதி கூட்டணி. கட்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவதாக கூறினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top