காவிரி பிரச்னைக்காக ரயில் மறியல்: 25,000 பேர் கைது: இன்றும் ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை (அக்.17) நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மொத்தம் 25,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

14690952_1804542909826286_2176062177510593157_n
ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களையும் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இன்றும் ரயில் மறியல் போராட்டம்: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் திங்கள்கிழமை (அக்.17), செவ்வாய்க்கிழமை (அக்.18) ஆகிய இரண்டு நாள்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை (அக்.17) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் (அக்.18) ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
மு.க.ஸ்டாலின் கைது: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெரம்பூர் மேம்பாலத்தில் இருந்து, ரயில் நிலையம் வரை திமுகவினர் ஊர்வலமாக வந்தனர். ரயில் நிலையத்துக்கு உள்ளே அவர்கள் செல்ல முற்பட்டபோது, காவல்துறையினர் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அந்த இடத்தில் நின்றவாறு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் திமுகவினர் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் கோஷம் எழுப்பினர். சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் வந்தது. அதனை மறித்து மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அதனையடுத்து, மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், பூங்கோதை உள்பட திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பேரவை உறுப்பினர்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வைகோ, ஜி.ராமகிருஷ்ணன்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தண்டவாளத்தில் இறங்கி, மங்களுருக்குச் செல்லும் ரயிலை மறித்து வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். மதிமுக பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்பட மக்கள் நலக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருமாவளவன்: சென்னை பேசின்பாலம் ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நலக் கூட்டணியினர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி சென்னையிலிருந்து ஆமதாபாத் நோக்கிச் சென்ற நவஜீவன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
தமாகா போராட்டம்: எழும்பூர் ரயில் நிலையத்தில் தமாகா துணைத் தலைவர் கோவை தங்கம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் விடியல் சேகர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல்: நாகப்பட்டினம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் காலை 9 மணியளவில் ஒன்று கூடினர். அவர்கள் அங்கிருந்து ஏர் கலப்பையை கையில் ஏந்தியபடி திருக்கண்ணங்குடி ரயில் நிலையத்துக்கு, தண்டவாளம் வழியாக பேரணியாக வந்தனர்.
பின்னர் திருக்கண்ணங்குடி ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து, காய்ந்த நாற்றுகளை கைகளில் ஏந்தியபடி ஒப்பாரி வைத்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தினர். காரைக்காலிலிருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு பகல் 1 மணிக்கு வந்த சரக்கு ரயில் மறிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்தது.
முத்தரசன் உள்ளிட்டோர் போராட்டம்: திருவாரூர் மாவட்டத்தில் கொடிக்கால்பாளையம், முடிகொண்டான், வையகளத்தூர், குளிக்கரை, கோவில்வெண்ணி ஆகிய 5 இடங்களில் விவசாயிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் அருகேயுள்ள கொடிக்கால்பாளையத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் உலகநாதன், மாநில விவசாயத் தொழிலாளர் அணி துணைச் செயலர் சங்கர் மற்றும் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இங்கு பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.என்.நேரு தலைமையில்…: திருச்சி மாநகர், புறநகரில் 7 இடங்களில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 56 பெண்கள் உள்பட 1,156 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீரங்கத்தில் மேற்குத் தொகுதி எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட திமுக செயலருமான கே.என்.நேரு தலைமையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ராஜா தலைமையிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோட்டை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநில விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் நந்தா கே.செந்தில்வேல், குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், புதுச்சேரி, நாமக்கல், சேலம், தருமபுரி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அரசியல் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top