லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற ரஷிய தடகள வீராங்கனையின் தங்கப்பதக்கம் பறிப்பு

201610130307489872_doping-russian-lysenko-stripped-of-2012-olympic-hammer-gold_secvpf

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோவின் பதக்கம் பறிக்கப்படுகிறது. மறு பரிசோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோ பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

ரஷிய வீராங்கனைகள் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு சமீபத்தில் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ரஷியாவின் தாத்யானா லைசென்கோவிடம் அப்போது எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த சிறுநீர் மாதிரி மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் தாத்யானா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராக அழைத்தும் அவர் மறுத்து விட்டார். இதனால் அவரது தங்கப்பதக்கத்தை பறிக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

33 வயதான தாத்யானா லைசென்கோ 2011 மற்றும் 2013-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஊக்க மருந்து பயன்படுத்தி சிக்கியதால் 2007 முதல் 2009-ம் ஆண்டு வரை தாத்யானா போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. ரஷிய தடகள அணிக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டதால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

தாத்யானா லைசென்கோ 2-வது முறையாக ஊக்க மருந்து சோதனையில் சிக்கி இருப்பதால் அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாத்யானா தங்கப்பதக்கம் பறிக்கப்படுவதால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற போலந்து வீராங்கனை அனிடா வோடார்சிக்கு தங்கப்பதக்கமும், வெண்கலப்பதக்கம் வென்ற ஜெர்மனி வீராங்கனை பிட்டி ஹெய்ட்லெருக்கு வெள்ளிப்பதக்கமும், 4-வது இடம் பிடித்த சீன வீராங்கனை சாங் வென்சிக்கு வெண்கலப்பதக்கமும் கிடைக்கும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top