காவிரி நீர் பிரச்சனை: சட்டசபை அவசர கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்

201610131539585799_farmers-union-meeting-resolution-must-immediately-convene-an_secvpf

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தமிழகத்துக்கு ஆண்டு தோறும் கர்நாடகம் வழங்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீர் அளவில், கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்தும், இதுவரை கர்நாடகம் தமிழகத்துக்கு வெறும் 33.95 டி.எம்.சி. மட்டுமே வழங்கி உள்ளது.

இதனால் தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக குறுவைச் சாகுபடியையும், முதல் முறையாக சம்பா சாகுபடியையும் இழந்து மிகப்பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

வறுமையிலும், கடன் தொல்லைகளாலும் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.

தமிழக விவசாயிகளின் துயர் துடைக்கவும், இந்தப் பிரச்சினையில் தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை மத்திய அரசுக்கு தெளிவாக உணர்த்தவும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்பதை கண்டிக்கும் வகையிலும், தமிழக அரசு உடனடியாக முன்வந்து அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி இந்த பிரச்சனை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்.

அனைத்துக் கட்சி தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து சென்று பிரதமரை சந்தித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தமிழக விவசாய அமைப்புகளின் இந்த கூட்டம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

எனவே நதிநீர் பிரச்சனைகள் சட்டம் 1956-ன்படி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

சட்டத்துக்கு புறம்பாக ஒரு சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தும் மத்திய அமைச்சர்களின் போக்கை மிகக் கடுமையாக கண்டிப்பதோடு, அரசியல் ஆதாயம் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப் போட்டு, தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசின் நிலைப்பாட்டையும் இந்த கூட்டம் கண்டிக்கிறது.

மேலும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் பேராபத்திலிருந்து அவர்களை காக்கவும், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு அமைத்து, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top