ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்

201610130957211890_isl-football-match-chennai-goa-teams-clash-today_secvpf

3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணியில் கடந்த சீசனில் ஆடிய மென்டோஜா (கொலம்பியா), இலானோ (பிரேசில்) ஆகியோர் இல்லாதது பெருத்த பின்னடைவாக இருந்து வருகிறது எனலாம். முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்த சென்னை அணி உள்ளூரில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த ஆட்டத்தில் சென்னை அணி எல்லா துறையிலும் பலவீனமாக காணப்பட்டது. அதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

கோவா அணி இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை. அந்த அணி முதல் ஆட்டத்தில் கவுகாத்தி அணியிடமும், 2-வது ஆட்டத்தில் புனே அணியிடமும் தோல்வி கண்டது. ஐ.எஸ்.எல். தொடரில் இரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 3 முறையும், கோவா அணி 2 முறையும் வெற்றி கண்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற ஆட்டமும் அடங்கும்.

கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் தோல்வி கண்டதும், அந்த அணியினர் சென்னை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க கோவா அணி முயலும். கோவா அணியில் லூசியோ (பிரேசில்) உள்பட சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். கடந்த இரண்டு சீசனிலும் இரு அணிகளும் அரை இறுதியை எட்டிய அணிகளாகும். வெற்றி கணக்கை தொடங்க இரு அணிகளும் தீவிர முயற்சியை மேற்கொள்ளும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி கருத்து தெரிவிக்கையில், ‘டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 11 வீரர்களையும் மாற்ற வாய்ப்பு இருந்தால் அத்தனை பேரையும் மாற்றி இருப்பேன். அதற்கு போட்டி விதிமுறையில் இடமில்லை. இன்றைய ஆட்டத்தில் சிறந்த அணியை களம் இறக்குவேன்’ என்றார்.

கோவா அணியின் பயிற்சியாளர் ஜிகோ அளித்த பேட்டியில், ‘கடந்த இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் நன்றாக விளையாடினாலும் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்த ஆட்டத்துக்கு சிறப்பாக தயாராகி இருக்கிறோம். நல்ல முடிவை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top