அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டார்

201610130712362686_minister-o-panneerselvam-came-to-fort-inspected-files_secvpf

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி நள்ளிரவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர் குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 20 நாட்கள் கடந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில், “முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த அனைத்துத் துறைகளும் நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழக கவர்னர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவை கூட்டங்களுக்கும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே தலைமை வகிப்பார். இந்த ஏற்பாடு அனைத்தும் முதல்-அமைச்சரின் அறிவுரையின்பேரில் செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பணிக்கு வரும் வரை அவரது இலாகாக்களை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார். ஜெயலலிதாதான் முதல்-அமைச்சராக தொடர்கிறார்” என்று கூறப்பட்டு இருந்தது.

அதன்படி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த பொது, இந்திய ஆட்சிப்பணி, காவல் பணி, வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், உள்துறை ஆகிய துறைகள், கவர்னரின் அறிவிப்புப்படி, நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து அவர் நேற்று மாலை 5.15 மணியளவில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டைக்கு வந்தார். துறை அதிகாரிகளிடம் இருந்து கோப்புகளை வரவழைத்து அவற்றை பார்வையிட்டார். இரவு வரை அவர் அலுவலகப்பணியில் ஈடுபட்டார்.

தலைமைச் செயலாளர் ராம மோகன ராவும் நேற்று தலைமைச் செயலகத்தில் நீண்டநேரம் அலுவலகப் பணியில் ஈடுபட்டார். சில துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தனர். நேற்று அரசு விடுமுறை தினம் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top