நான் யார் ஹிட்டையும் திருடி வரவில்லை: கண்ணீர்மல்க பேசிய சிவகார்த்திகேயன்

201610112217548145_sivakarthikeyan-says-he-did-not-steal-anyone-hit_secvpf

ரெமோ படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ், கேமராமேன் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத், பாக்யராஜ் கண்ணன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ், சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, திருப்பூர் சுப்பிரமணியன் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “ரெமோ படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதன்மூலமாக அனைவரையும் திருப்திப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறோம். அதில் வெற்றி பெற்றிருக்கிறோமா என்பதை ரசிகர்கள்தான் சொல்லவேண்டும்.

இதுவரையில் யாரும் எடுக்காத கதை என்று புதிதாக சொல்ல எதுவும் இல்லை. மக்கள் ரசிக்கும்படியான யதார்த்தமான படம் ரெமோ. இதை முழுமையாக உழைப்பை போட்டு கொடுத்திருக்கிறோம்.

இப்படத்தில் பயணித்த அனைவரும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றும். ஆனால், அதைக்கூட சொல்ல முடியாத அளவுக்கு நிறைவாக செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. ஒரு படம் நடித்து முடித்தபிறகு அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கும் சூழல் மிகவும் கடினமானது. ரஜினி முருகன் படம் வெளியாவதற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, வெளிவரும் படங்களை தடுக்காதீர்கள். எங்களை வேலை செய்ய விடுங்கள்.

உங்களைப் போன்ற சாதாரண இடத்தில் இருந்து வந்துதான் மேடை ஏறியிருக்கிறேன். இதை தக்கவைக்க வேண்டும் என்றோ, அதைவிட பெரிய இடத்திற்கு போக வேண்டும் என்றோ நாங்கள் செயல்படவில்லை. நானும் ராஜாவும் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி மக்களை மகிழ்விக்க போராடுகிறோம். என்றாவது ஒருநாள் அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு சிறந்த படத்தை கண்டிப்பாக இந்த டீம் கொடுக்கும்.

நான் எல்லா மேடையிலும் அழுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் உண்மையாக இருக்கிறேன். ஒவ்வொரு ஹிட்டுக்கும் போராடுகிறேன். யார் ஹிட்டையும் திருடி வரவில்லை” என்று கண்ணீர்மல்க தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top