நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது

201610100853315872_actor-association-general-meets-next-month-_secvpf

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத்தலைவர் பொன்.வண்ணன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ராஜேஷ், பிரசன்னா, ராம்கி, பூச்சி முருகன், நந்தா, உதயா, டி.பி.கஜேந்திரன், அஜய்ரத்னம், ஸ்ரீமன், ஹேமச்சந்திரன், குட்டி பத்மினி, சோனியா, லலிதாகுமாரி உள்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுதல், அதிருப்தியாளர்கள் பிரச்சினைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டப்பட்டது. விஷால், கார்த்தி ஆகியோர் புதிய படமொன்றில் நடித்து அதில் கிடைக்கும் சம்பள தொகையை கட்டிட நிதியில் சேர்ப்பதாகவும் அறிவித்து உள்ளனர். நிதி திரட்டும் நடவடிக்கைகள் குறித்தும் புதிய கட்டிடத்துக்காக தயாராகி உள்ள வரைபடம் குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.

நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தற்போதைய நிர்வாகிகள் மீது அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டி சங்க அலுவலகம் எதிரில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த வாராகி உள்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுத்து சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் வற்புறுத்தி உள்ளனர். இதுபற்றியும் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்.வண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் சங்க நிர்வாக பொறுப்புக்கு வந்து 50 சதவீத பணிகளை முடித்துவிட்டோம். சங்க உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். எங்கள் மீது சிலர் குற்றச்சாட்டுகள் கூறி உள்ளனர். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

நாங்கள் நேர்மையாக செயல்படுகிறோம். கோர்ட்டிலும் இதனை நிரூபிப்போம். நடிகர் சங்க பொதுக்குழு செப்டம்பர் மாதம் கூட்டப்பட்டிருக்க வேண்டும். சில நிர்வாக சிக்கல்களால் கூட்ட முடியவில்லை. அடுத்த மாதம் (நவம்பர்) இறுதியில் நடிகர் சங்க பொதுக்குழுவை கூட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளோம். இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும். பொதுக்குழு கூட்டத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top