பார்முலா1 கார்பந்தயம்: ஜப்பான் போட்டியில் ராஸ்பெர்க் முதலிடம்

201610100851473545_rosberg-wins-in-japan-as-mercedes-seal-constructors-crown_secvpf

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 17-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி அங்குள்ள சுஜூகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 307.573 கிலோ மீட்டர் ஆகும். 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் காரில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர்.

முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட ஜெர்மனி வீரர் ராஸ்பெர்க் (மெர்சிடஸ் அணி) 1 மணி 26 நிமிடம் 43.333 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் இது அவரது 9-வது வெற்றியாகும். அவரை விட 4.979 வினாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் (ரெட்புல் அணி) 2-வதாகவும் (18 புள்ளி கிடைத்தது), நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 3-வதாகவும் (15 புள்ளி) வந்தனர். போர்ஸ் இந்தியா அணியின் வீரர்கள் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), நிகோ ஹல்கென்பெர்க் (ஜெர்மனி) முறையே 7-வது, 8-வது இடங்களை பிடித்தனர்.

இதுவரை நடந்துள்ள 17 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ராஸ்பெர்க் 313 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஹாமில்டன் 280 புள்ளிகளுடன் அவரை பின்தொடருகிறார். அதே சமயம் ராஸ்பெர்க்-ஹாமில்டனை உள்ளடக்கிய மெர்சிடஸ் அணி, அணிக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை 593 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது ஆண்டாக உறுதி செய்திருக்கிறது. 18-வது சுற்று பந்தயம் வருகிற 23-ந்தேதி அமெரிக்காவில் நடக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top