கர்நாடக மாநில அணைகளில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,700 கனஅடி தண்ணீர்

201610050740463379_9700-cubic-feet-per-second-of-water-from-dams-in-karnataka_secvpf

காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடிவெடுத்தது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று தமிழகத்தில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,300 கனஅடி வந்து கொண்டு இருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 700 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, பிரதான மெயின் அருவி, ஐந்தருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததை அறிந்ததும் பென்னாகரம் தாசில்தார் மாரிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒகேனக்கல்லுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மெயின் அருவி, நடைபாதை, பரிசல் துறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top