முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப்பில் பரவும் ஆடியோ

201610031936089406_cm-jayalalitha-health-improvement-apollo-hospital-report_secvpf

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்துவரும் அதேவேளையில் காட்டுத்தீப்போல் சில தேவையற்ற வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன.

அவ்வகையில், அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப் மூலமாக ஒரு ஆடியோ வதந்தி படுவேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கம்பீரக்குரலுக்கு சற்றும் பொருந்தாமற்போனாலும், அவர் உரையாற்றும் அதே தொணியில் சற்று தழுதழுத்த குரலில் பேசியுள்ள அந்த ஆடியோ செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

”என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய, என்னை வாழவைத்து கொண்டிருக்கும் அன்பு தெய்வங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!

நான் உங்கள் அன்பு அம்மா ஜெயலலிதா பேசுகிறேன். என் உடல்நலம் கருதி, எனக்காக மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்பிற்கு மட்டும் சொந்தமாகிய என்னை கடவுள் நல்ல உடல்நலத்துடனே வைத்திருக்கிறார். சிறிது ஓய்வெடுத்தபிறகு, உங்கள் முன்னால் தோன்றி, விளக்கம் அளிக்கக்கூடிய அளவிற்கு திடமான உடல்நலத்துடன் ஆண்டவன் எனக்கு ஆசீர்வாதம் அளித்திருக்கிறார்.

ஆக, தேவையில்லாத வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க.வின் அசுரவளர்ச்சி, அரசின் அமைதியான ஆட்சி நடத்தை இவை எல்லாம் சூட்சமக்காரர்களுக்கு வேதனைத்தர, எனது சாதாரண உடல்நலக்குறைவு அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஆகவே, இதுபோன்ற நாகரிகமில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள்.

கோடிக்கணக்கான மக்களின் ஆசீர்வாதமும், இதய தெய்வம் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளின் அன்பும் எனக்கு இருக்கும்போது உங்களைவிட்டு என்னை யாராலும் பிரிக்க முடியாது.

நான் ஏற்கனவே சொன்னதுபோல், ‘உங்களுக்காகவே நான் – உங்களாலேயே நான்” எனவே, சட்டசபை தேர்தலில் எப்படி அ.தி.மு.க.வை வெற்றியடையச் செய்தீர்களோ.., அதேபோல், வருகிற அக்டோபர் மாதம் 19-ம் தேதி, 17-ம் தேதி அன்று நடைபெற இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலிலும், இரட்டை இலை சின்னத்திற்கு உங்கள் மேலான வாக்குகளைதந்து, பெருவாரியான வெற்றிகளை தரவேண்டும் என்று கேட்டு, வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணா நாமம் வாழ்க! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! நன்றி! வணக்கம்!!

மேற்கண்டவாறு அந்த ஆடியோ வதந்தியில் சில இடங்களில் உணர்ச்சிப் பெருக்கால் குரல் அடைப்பதுபோன்ற ‘மிக்சிங்’ முறையில் சில இடங்களில் பேசப்பட்டு இருக்கும் இந்த ஆடியோ சமூக வலைத்தளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top