காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன்- பொன்.ராதாகிருஷ்ணன்

201610021953192865_cauvery-issue-all-party-meeting-called-by-participate-pon_secvpf

மதுவுக்கு எதிரான ஒரு தேசியப்பயணம் என்ற பெயரில் இன்று கன்னியாகுமரியில் தொடங்கிய பயணத்தை சமூக சேவகி மேதாபட்கர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் பங்கேற்றார்.

முன்னதாக அவர் காமராஜர் நினைவு நாளையொட்டி கன்னியா குமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காந்திஜெயந்தியை முன்னிட்டு காந்தி நினைவு மண்டபத்துக்கு மரியாதை செலுத்தச் சென்றார்.

அங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் காந்தி மண்டபத்துக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்தார். அப்போது 2 பேரும் நேருக்கு நேர் சந்தித்து வணக்கம் செலுத்தினர். பின்னர் காந்தி அஸ்தி கட்டத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு சென்றனர். தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் மண்டபத்துக்கு சென்று அங்கும் மரியாதை செலுத்தினார்.

அப்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி நதி நீர் பிரச்சினையில் அந்தந்த மாநிலத்தவரின் கருத்தில் நாங்கள் தலையிடப்போவதில்லை. அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் அனைத்துகட்சி கூட்டத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். அதேபோல தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும்போது என்னை அழைத்தால் நானும் அதில் கலந்து கொள்வேன். அதில் எந்த தவறும் இல்லை.

அதேபோல தான் கர்நாடகாவில் நடந்த காவிரி நதி நீர் பிரச்சினை கூட்டத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய மந்திரிகள் 3 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

காவிரி பிரச்சினையில் அதன் உரிமையை மீறுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க முடியாது. தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தான் நாம் கேட்கிறோம். மத்திய அரசும் அதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கர்நாடக அரசு இப்போது அங்கு ஆட்சி செய்ய விரும்பவில்லை. கர்நாடக மாநிலத்தில் முறைப்படி தேர்தல் வருவதை விட முன் கூட்டியே தேர்தல் வரவேண்டும் என்ற காரணத்தில் தான் இந்த பிரச்சினையை கிளப்புகிறார்கள். தற்போதைய அரசை மக்கள் தோற்கடிப்பார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கவர்னரும் நேற்று நேரில் சென்று பார்த்து அறிக்கை அளித்துள்ளார். அதனால் முதல்வர் உடல் நிலை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top