தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மீண்டும் மறுப்பு – கர்நாடக மாநில அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

201610020753324440_cauvery-water-opposition-parties-back-karnataka-government_secvpf

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரியில் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி கர்நாடக அரசு ஒரு மனு தாக்கல் செய்தது. இதேபோல், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றும் வரையில் கர்நாடகத்தின் எந்த திருத்தம் கோரும் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கோரி தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கி அமர்வு, வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 1-ந் தேதி முதல் (நேற்று) முதல் வருகிற 6-ந் தேதி முதல் 6 நாட்களுக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.

அப்போது, கர்நாடகம் கண்டிப்பாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், கர்நாடக அரசுக்கு இது இறுதி வாய்ப்பு என்றும் கூறிய நீதிபதிகள், கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற தவறினால் கண்டனத்துக்கு உள்ளாக நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களில் அமைக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் கட்டளையிட்டனர்.

இந்த உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற தவறினால், கர்நாடகத்தில் காவிரி பாசன பகுதியில் உள்ள 4 அணைகளையும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடுவதற்கான சூழ்நிலையும், மேலும் அந்த மாநில முதல்-மந்திரியை அழைத்து விளக்கம் கேட்கும் சூழ்நிலையும் ஏற்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.இதில் மாநில மந்திரிகள் எம்.பி.பட்டீல், ஜெயச்சந்திரா, டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர், மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, ரமேஷ் ஜிகஜினகி, பாரதீய ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள், காவிரி படுகையில் 4 அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டசபையின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கர்நாடகம் சார்பில் யாரையும் உறுப்பினராக நியமனம் செய்யக்கூடாது என்றும், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யுமாறும் அவர்கள் ஆலோசனை கூறினர்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் கூறும்போது, “காவிரி படுகையில் 4 அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அரசு ஏற்கனவே திடமான முடிவு எடுத்து தண்ணீரை திறக்கவில்லை.

30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மாநில அரசு அமல்படுத்தக்கூடாது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு யாரையும் கர்நாடகம் சார்பில் உறுப்பினராக நியமிக்கக்கூடாது என்றும் ஆலோசனை கூறி இருக்கிறோம். நாங்கள் வழங்கியுள்ள ஆலோசனைப்படி மாநில அரசு உரிய முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.அதைத் தொடர்ந்து பேசிய சட்டசபை ஜனதா தளம் (எஸ்) துணைத்தலைவர் ஒய்.எஸ்.வி.தத்தா, “எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொள்ளக்கூடாது என்றும் கூட்டத்தில் தெரிவித்தோம்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top