புதுக்கோட்டை- பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டுகள் பழமையான உலோக தொழிற்கூடம்!

புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக்கோட்டையில் தமிழகத்தில் முதல்முறையாக 2,500 ஆண்டுகள் பழமையான, பாறைகளில் அமைக்கப்பட்ட உலோக தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

puthu

புதுக்கோட்டையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர், சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடங்களுக்கு மரபுவழி பயணம் மேற்கொண்டனர். அப்போது, மண் கோட்டைகள் நிறைந்த பகுதியாக விளங்கிய பொற்பனைக் கோட்டையில், தமிழரின் தொழில் நுட்பத்தைப் பறைசாற்றும் வகையி லான, பழமையான உலோகத் தொழிற்கூடத்தின் உருக்கு உலைகள் மற்றும் குளிரூட்டும் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் எ.மணிகண்டன் கூறியது: பொற்பனைக் கோட்டையில் உள்ள செம்பாறையில் ஆங்காங்கே துளைகள் உள்ளன. அதில், ஒரு துளையின் எதிரே உள்ள மற்றொரு துளையின் பக்கவாட்டில் 4 சிறிய துளைகள் உள்ளன. இதில், துருத்தி மூலம் காற்றைச் செலுத்தி, உலோகங்களை உருக்கியுள்ளனர். அருகே உள்ள பள்ளத்தை தண்ணீர் தொட்டியாக பயன்படுத்தி, உலோகங்களைக் குளிரூட்டி உள்ளனர்.

பொற்பனைக்கோட்டை பகுதியில் இரும்பு, அலுமினியத்தை அடிப்படை தாதுப்பொருளாகக் கொண்ட லேட்டரைட் கற்கள் எனப்படும் செம்பூரான் கற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

மேலும், வெப்ப உலைப்பூச்சு மற்றும் உருக்கு வேலைக்குப் பயன்படுத்தப்படும் குவார்ட்சைட் எனப்படும் சீனிக் கற்களும், உலோகக் கழிவுகளும் உள்ளதாலும், இங்கு உலோக உருக்கு ஆலைகள் இருந்துள்ளதை உறுதிசெய்ய முடிகிறது.

தமிழகத்தில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர், ஆழ்வார் திருநகரி, கொடுமணல் பகுதிகளில் உள்ள உலோகப் பிரிப்பு தொழிற்கூடங்கள், மண் பாண்டங்கள் மற்றும் இதர கட்டுமானங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்திலேயே முதல்முறையாக பொற் பனைக்கோட்டையில்தான் பாறையிலான உலோக தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண்பாண்டங்கள் மூலம் அமைக்கப்பட்ட உருக்கு தொழிற்கூடங்கள் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானவை. எனவே, உருக்கு தொழிற்கூடங்கள் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். எனினும், உரிய தொழில்நுட்பம் மூலமே, இந்த தொழிற்கூடத்தின் வயதைச் சரியாகக் கணிக்க முடியும்.

எனவே, பொற்பனைக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டு, சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சார முறைகளை வெளிக்கொணர வேண்டும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Scroll To Top