தமிழினத்தின் பெருமையை உயர்த்தியவர் எஸ்.ஆர். நாதன்: பழ. நெடுமாறன் புகழாரம்

சிங்கப்பூரில் 2 முறை குடியரசுத் தலைவராக இருந்த மறைந்த எஸ்.ஆர்.நாதன், தமிழினத்தின் பெருமையை உயர்த்தியவர் என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எஸ்.ஆர். நாதன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

nedumaran
அயலகத்தில் எத்தகைய மோசமான அல்லது கொத்தடிமைகளாக வாழ்க்கை நேர்ந்தாலும், அங்கு வாழ்ந்த தமிழர்கள் தங்களது உழைப்பால் முன்னேற்றம் அடைந்தனர். அதுமட்டுமல்லாமல், அந்த நாடுகளை வளப்படுத்தியதுடன், அந்நாடுகளின் முக்கிய பொறுப்புகளில் வீற்றிருக்கும் ஓர் இனம் தமிழினம்.
எஸ்.ஆர். நாதன் சிங்கப்பூருக்குச் சென்று 2 முறை குடியரசுத் தலைவராக இருந்தார். சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 74% பேர் சீனர்கள். மலேசியர்கள் 13% பேர். தமிழர்கள் 9.1% பேர். அந்நாட்டின் மக்கள்தொகையில் முக்கால்வாசி பேர் சீனர்களாக இருந்தாலும், 10 சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட தமிழர்களில் ஒருவர் 2 முறை சிங்கப்பூரின் குடியரசுத் தலைவர் பதவி வகித்தார் என்றால், அது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை.
எஸ்.ஆர். நாதன் தமிழினத்தின் பெருமையை உயர்த்தினார் என்றே கூறவேண்டும். அவர் எளிமையாகவும், மனிதநேயத்துடனும் வாழ்ந்தவர் என்றார் அவர்.
முனைவர் ம.நடராசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் பேசினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top