500-வது டெஸ்ட்: 197 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 318 ரன்களும், நியூசிலாந்து 262 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 434 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 93 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. லுக் ரோஞ்ச் 38 ரன்களுடனும், விக்கெட் தடுப்பாளர் சான்ட்னெர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், 5-வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆரம்பத்தில் சற்று நிதானம் காட்டி  சாண்ட்னெர் -லூக் ரோஞ்ச் ஜோடி தோல்வியை தவிர்க்க போராடியது. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். ரோஞ்ச் 80 ரன்களில் அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர் ஆட்டமிழந்ததும் நியூசிலாந்து அணி ஆட்டம் காண ஆரம்பித்தது. சீரான இடைவெளியில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இறுதியில் 87.3 ஓவர்கள் விளையாடிய நீயூசிலாந்து அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணியை இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  இந்த வெற்றியின் மூலம் இந்திய  அணி தனது 500 வது டெஸ்டில் வென்று வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top