சட்டசபை நாளை அவசரமாக கூடுகிறது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

தமிழகத்துக்கு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது இல்லை என்று சித்தராமையா தலைமையில் நடந்த கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபையின் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டதால் பெங்களூரு நகரிலும், கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் பயங்கர கலவரம் ஏற்பட்டது.

இந்த நிலையில் 19-ந் தேதி டெல்லியில் கூடிய காவிரி மேற்பார்வை குழு 21-ந் தேதி (நேற்று) முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு காவரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 21-ந் தேதி (நேற்று) முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூருவில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பற்றி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா புறக்கணித்தது.

கூட்டத்தில் பேசிய ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிராகரிக்க வேண்டும் என்றும், இனி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தினர். மேலும் அவர்கள் இதுபற்றி விவாதிக்க சட்டசபையின் அவசர கூட்டத்தை கூட்டி, அதில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினர். இதே கருத்தை கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற தலைவர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அனைத்துக்கட்சி கூட்டம் முடிந்த பிறகு முதல்-மந்திரி சித்தராமையா தனது மந்திரிசபையை கூட்டி விவாதித்தார். மந்திரிசபை கூட்டத்தில், உடனடியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக சட்டசபையின் அவசர கூட்டத்தை நாளை (வெள்ளிக்கிழமை) கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க சட்டசபையின் அவசர கூட்டம் நாளை நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன் பெங்களூருவில் விதான சவுதானை முற்றுகையிட வந்தார். வழியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் நகலை சாலையில் கிழித்து எறிந்து விட்டு கலைந்து சென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top