3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி: ரோஞ்சி சதம்; நியூஸிலாந்து தோல்வியிலிருந்து தப்பியது

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 2 மாத பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அந்த அணி விளையாடவுள்ளது. இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில் அந்த அணி விளையாடியது. டெல்லியில் நடந்த இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 324 ரன்களைச் சேர்த்தது.

jiooo

இதைத்தொடர்ந்து ஆடிய மும்பை அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. பவார், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சதத்தால் மும்பை அணி 2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 431 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் 3-ம் நாளான நேற்று மும்பை அணி பேட்டிங்கை தொடர்ந்தது. 464 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

மும்பை அணியை விட 140 ரன்கள் பின்தங்கிய நிலையில் பேட்டிங்கைத் தொடங்கிய நியூஸிலாந்து அணி குப்தில் (0), சான்ட்நெர் (8 ரன்கள்), பிரேஸ்வெல்(17 ரன்கள்), நிக்கோல்ஸ் (1 ரன்) போல்ட் (15 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் என்று தடுமாறியது. இதனால் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து தோற்கும் வாய்ப்புகள் உருவானது. ஆனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஞ்சி, வால்டிங்குடன் (43 ரன்கள்) சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டக்காரர் லூக் ரோஞ்சி எடுத்த சதத்தின் காரணமாக நியூஸிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பியது.

பொறுப்பாக ஆடிய ரோஞ்சி 112 பந்துகளில் 107 ரன்களைக் குவிக்க, நியூஸிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து போட்டி சமநிலையில் முடிந்தது. இதில் மும்பை வீரர் வல்சங்கர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். லாட், கோஹில் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top