ரஷ்ய ஆதரவாளர்களை ஒடுக்க உக்ரைன் தீவிரம்!

imagefull11-e1394174394551உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில், அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ள, ரஷ்ய ஆதரவாளர்களை விரட்டும் பணியில், உக்ரைன் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

“சோவியத் யூனியன்’ என்ற பெயரில் பல நாடுகள் இணைந்த அமைப்பு சிதறிய பின், அந்த நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க, மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அதிபராக இருந்த யானுகோவிச், இதற்கு உடன்படவில்லை.

மக்கள் புரட்சியை சமாளிக்க முடியாத அதிபர், யானுகோவிச் தலைமறைவானார். உக்ரைனின் ஒரு மாகாணமாக இருந்த கிரிமியாவில், ரஷ்யர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே, இதை உக்ரைனிலிருந்து தனியாக பிரிப்பது குறித்து, மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

கிரிமியாவை, ரஷ்யாவுடன் இணைக்க அப்பகுதி மக்கள் ஆதரவளித்ததால், கிரிமியா, ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்லோவியான்ஸ்க் நகரிலும், ரஷ்ய ஆதரவாளர்களின் போராட் டம் வெடித்துள்ளது. அங்குள்ள அரசு கட்டடங்களை, போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

“கிரிமியாவில் நடந்தது போல, இப்பகுதியிலும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்’ என, போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இங்குள்ள போலீஸ் நிலையத்தை, ரஷ்ய ஆதரவாளர்கள் கைப்பற்றினர். உக்ரைன் பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, சிலரை கைது செய்துள்ளனர். அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் படி, ராணுவத்துக்கு உக்ரைன் தற்காலிக அதிபர், துருச்சினோவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த எச்சரிக்கையை மீறி, ரஷ்ய ஆதரவாளர்கள், உக்ரைன் நாட்டின் அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதையடுத்து, இப்பகுதிகளில் உக்ரைன் ராணுவம், கவச வாகனங்களுடன் நுழைந்துள்ளது. சொந்த நாட்டு மக்கள் மீது, உக்ரைன் அரசு, அடக்குமுறையை கையாள்வதாக, ரஷ்யா புகார் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள, ஸ்லோவியான்ஸ்க், டோனட்ஸ்க் நகரங்களில், அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்திருந்த ரஷ்ய ஆதரவாளர்களை அகற்ற முயன்றபோது, அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் மோதல் மூண்டது. இதனால், அங்கு, உள்நாட்டு போர் ஏற்படும் சூழல் உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top