திருப்பூரில் 5 ஆயிரம் பனியன் கம்பெனிகள் வேலை நிறுத்தம்: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

gold

திருப்பூரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகள், அதை சார்ந்த டையிங், காஜா பட்டன், பிரிண்டிங் நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. மற்றும் உள்ளூர்-வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் பல்வேறு ஜவுளி தொழில்களில் வேலை பார்க்கும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் பந்த் காரணமாக சுமார் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூரில் மத்திய-மாநில அரசுகளின் அலுவலகங்களுக்கும் மேலும் கர்நாடக வங்கிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

இதேபோல் சினிமா தியேட்டர்களில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

திருப்பூர் மாநகரில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகர் முழுவதும் 22 ரோந்து வாகனங்களில் சென்றபடி கண்காணித்து வந்தனர்.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவினாசி, தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா உத்தரவின் பேரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் ஆட்டோ, டேக்சி, லாரிகள் ஓடவில்லை. தனியார் பஸ்கள் முற்றிலும் இயங்கவில்லை. காய்கறி சந்தை, நகைக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவைகள் 95 சதவீதம் மூடப்பட்டிருந்தது.

தனியார் பள்ளிகள் செயல்படவில்லை. கன்னடர்கள் வாழும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லையில் பதட்டத்தை தணிக்க அதிக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட உள்ளனர்.

இதனால் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நடந்த தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சினிமா படிப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. அரசு பஸ்களிலும் குறைவான பயணிகளே இருந்தனர்.

நீலகிரியை பொறுத்தவரை பந்த் காரணமாக சுற்றுலா தலங்களில் ஒருசில பயணிகள் மட்டுமே வந்துசென்றனர். சாலைகள் மற்றும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top