கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: ரெயில் மறியல்

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..காலை 6 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.
முழு அடைப்பையொட்டி தமிழகம் முழுவதும் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
vck
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்வதற்கு தயாராக ஏராளமான போலீஸ் வேன்களும், மாநகர பஸ்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின் போர்வையில் கலவரத்தில் ஈடுபட்டால் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எனினும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பஸ்கள் கன்னியாகுமரி மாவட்ட எல்லைப்பகுதியான களியக்காவிளை அருகிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்துவரும் பஸ்கள் அத்திப்பள்ளி பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை இடைமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், சென்னையில் தி.மு.க. பொருளாளரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் எழும்பூர் ரெயில் நிலையத்தை நோக்கி தி.மு.க.வினர் பேரணியாக சென்று கொண்டுள்ளனர். சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
அம்பத்தூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், ஸ்ரீவல்லிப்புத்துரில் செங்கோட்டை -மதுரை பேசஞ்சர் ரயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், புதுக்கோட்டையிலும் சென்னை-ராமேஸ்வரம் ரெயிலை இடைமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைதாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் ரெயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, எவ்வித விரும்பத்தகாத சம்பவங்களும் இன்றி இன்றைய முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் உரிய பாதுகாப்புடன் இயங்கி வருகின்றன. இதேபோல் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ் மற்றும் ரெயில் சேவைகளில் எவ்வித பாதிப்பும் இல்லை.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top