காஷ்மீர் மக்களுக்கு எதிராக இந்தியா அதிக படைபலத்தை பயன்படுத்துகிறது; ஐ.நா.குற்றச்சாட்டு ; இந்தியா கண்டனம்

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அமர்வில் அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசேன் எழுதிய கடிதம் செவ்வாய்க்கிழமை வாசிக்கப்பட்டது.

kasmir
அதில் அவர், “இந்தியாவின் நிர்வாகத்தின்கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில், பொது மக்களுக்கு எதிராக அதிகப்படியான படைபலம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதேபோல், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் இருந்து மோதல்கள் குறித்தும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, காயப்படுவது குறித்தும் முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே, காஷ்மீரில் உண்மை நிலையை ஆய்வு செய்ய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் குழுவை இந்தியாவும், பாகிஸ்தானும் அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 

 

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தொடர்பாக அந்த ஆணையம் தெரிவித்த கருத்துகளுக்கு, இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 33-ஆவது அமர்வில் ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதி அஜித் குமார் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதன் ஒரு பகுதியை பாகிஸ்தான் தொடர்ந்து தனது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளது. இந்நிலையில், இரு காஷ்மீர் நிலைமைகளையும் ஒன்றாக ஒப்பிட முடியாது.
ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக அரசு உள்ளது. அரசில் அனைத்து பிரிவுகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்தகைய நிலைமை இல்லை.
ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்த கருத்துகளை இந்தியா தனது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. காஷ்மீரின் தற்போதைய நிலவரத்துக்கு, சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியின் மரணத்தைத் தொடர்ந்து, எல்லைக்கு அப்பால் இருந்து (பாகிஸ்தானில் இருந்து) இயக்கப்படும் சக்திகளே காரணமாகும்.
காஷ்மீரில் போராட்டக்காரர்களுடன் ஊடுருவி, அவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டு, இந்தியப் பாதுகாப்புப் படைகள் மீது எல்லைக்கு அப்பால் இருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதுதொடர்பான ஆதாரங்களையும் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் திறனை மேம்படுத்தவும், அதன் பணிகளை ஒழுங்குப்படுத்தவும் தலைமை ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசேன் மேற்கொண்டுள்ள முயற்சிகளை இந்தியா பாராட்டுகிறது.
அதேநேரத்தில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆளுமை, மற்றும் நிர்வாகத்தில் தொடர்ந்து தெளிவற்ற தன்மையே நிலவுகிறது.
ஆணைய செயல்பாடுகளில் மாற்றம் செய்வது தொடர்பாக தலைமை ஆணையர் முன்வைத்த திட்டத்திலும் கூடுதல் தெளிவு தேவைப்படுகிறது என்றார் அஜித் குமார்.
ஐநா வின் வேண்டுகோளை இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. அதேநேரத்தில், பாகிஸ்தான் வரவேற்பு தெரிவித்தது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top