உள்ளாட்சிப் பதவியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜி.குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனு:
தற்போதைய நடைமுறைப்படி தமிழக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு வருகின்றன. ஆனால், மகாராஷ்டிரம் மற்றும் சில மாநிலங் களில் ஆன்லைன் மூலம் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு ஆன்லைன் மூலம் வேட்பு மனுக்களை பெறுவதால் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் வேலைப் பளு குறைவதோடு, வெளிப்படைத் தன்மையும் இருக்கும்.
எனவே, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமல்லாமல், கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு நடத்தப்படும் தேர்தல் களுக்கும் கட்டாயமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.
வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்து ஏற்கெனவே உயர்நீதி மன்றத்தின் மற்றொரு அமர்வில் விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலின்போது ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்வது, கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக முடிவெடுக்க வேண்டும்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அதன்படி இடஒதுக்கீட்டை அளிக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்புடைய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்