கர்நாடகத்தில் வன்முறை:பிரதமரை தொடர்ந்து தமிழக மக்கள் மீது பழிபோடும் மத்திய மந்திரி சதானந்த கவுடா

காவிரி பிரச்சினையில், கர்நாடகத்தில் வன்முறை தலைவிரித்தாடியதற்கு தமிழக மக்கள் மீது மத்திய மந்திரி சதானந்த கவுடா பழிபோடுகிறார்.

தமிழ்நாட்டில் டெல்டா பகுதி விவசாயிகளின் சம்பா பயிர் சாகுபடிக்கு கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிடவில்லை. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு நாடியபோது, 15–ந் தேதி வரை வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிடுமாறும், பின்னர் 20–ந் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிடுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்புகள், கர்நாடகத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. தமிழக பஸ்கள், லாரிகள் என 90–க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. தமிழக பதிவு எண்களை கொண்ட வாகனங்களை ஓட்டிச்சென்றவர்கள் தாக்கப்பட்டனர்.
தமிழர்களின் கடைகள், ஓட்டல்கள் நொறுக்கப்பட்டன, சூறையாடப்பட்டன. இந்த சம்பவங்களை கண்டிக்கும் விதத்தில், தமிழ்நாட்டில்
அங்கொன்று இங்கொன்றுமாய் ஒரு சில சம்பவங்கள் நடந்தன.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஒருதலை பட்சமாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள சம்பவங்களால் தான் தனிப்பட்ட முறையில் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்த மோடி, எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதை தொடர்ந்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல் துறை மந்திரி சதானந்த கவுடா, ஏ.என்.ஐ. டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கர்நாடகத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு தமிழர்கள் மீது பழிபோட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

நான் கர்நாடக மக்களை குற்றம் சுமத்தமாட்டேன். ஏனென்றால், எங்களிடம் தண்ணீர் இல்லை. இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருகிறோம்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் வன்முறையை தூண்டி விடுகிறார்கள். கன்னடர்களை தாக்குகிறார்கள். பரந்த மனப்பாங்குடன் அவர்களுக்கு தண்ணீர் தந்தும்கூட, அவர்கள் இத்தகைய விஷம செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நிச்சயமாக இது யாரையும் ஆத்திரமூட்டும். சித்தராமையா அரசு, நிலைமையை சமாளிக்க தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சதானந்த கவுடா, கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top