ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு? அடுத்த வாரம் இறுதி விசாரணை

201609150632218245_tet-case-final-hearing-on-the-4th-of-next-month-supreme_secvpf

ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71-ல் வெயிட்டேஜ் முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது, அனைவருக்கும் வழங்குவது சரியல்ல, வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, கோர்ட்டு தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும் அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருப்பதாகவும், எனவே, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் லாவண்யா தரப்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும், இரு தரப்பினரும் விரிவான இறுதி விசாரணைக்காக தேதி குறிப்பிட்டு வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏற்கனவே இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் மேலும் சில மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி இறுதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவு சரி என்றும் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று வின்சென்ட், கே.கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top