ஊரடங்கு உத்தரவையும் மீறி வன்முறை: வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை

lorry

காவிரி விவகாரத்தில் கலவரத்தில் ஈடுபட்டுவரும் கன்னட அமைப்புகள் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி பெங்களூரில் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டன.
தமிழகத்துக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 5-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரை கன்னட அமைப்புகள் தாக்கியதைத் தொடர்ந்து, கன்னடர்களுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனால், ஆத்திரமடைந்த கன்னட அமைப்பினர் தமிழகப் பதிவு எண் கொண்ட பேருந்து, லாரிகள் மீது கல்வீசித் தாக்கினர். மேலும், பல்வேறு இடங்களில் பேருந்துகளுக்கு தீ வைத்தனர். இதனால், பெங்களூரில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்தது.
ஊரடங்கு உத்தரவை மீறி…
வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகர் முழுவதும் திங்கள்கிழமை 16 காவல் சரகங்களில் ஊரடங்கு உத்தரவும், ஒருசில இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள விஜயநகர் காவல் சரகத்தில் பட்டேகார் பாளையத்தில் தமிழருக்குச் சொந்தமான கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சாலைகளில் டயர் உள்ளிட்ட பொருள்களுக்குத் தீ வைத்து தமிழகத்துக்கு எதிராக கன்னட அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர். இதேபோல, திகளர்பாளையத்தில் தமிழகப் பதிவு எண் கொண்ட லாரி, எஸ்.எஸ்.ஆர் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.
ராம்நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, கரூர் வைசியா வங்கிகளின் பெயர் பலகைகளை வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினர். ராம்நகர் அருகே உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் பண்ணை வீட்டின் முன் குவிந்த கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு…

லாரி, பேருந்துகளுக்கு தீவைத்துக் கொளுத்தப்பட்டது குறித்து போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், பேருந்துகள் தீயில் எரிந்து முழுவதும் சேதமடைந்த பிறகே தீயணைப்புப் படையினருடன் சம்பவ இடத்து வந்தனர்.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்வதால், 16 காவல் சரகங்களிலும் ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் சரகங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


காவிரிப் பிரச்னை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் ராமேஸ்வரத்தில் கன்னடர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது.
இதைத் தொடர்ந்து, கன்னட சங்கங்களின் பெயரில் சில அரசியல் கட்சிகள் லாபம் பெற முயற்சி மேற்கொண்டன. அதன் விளைவாக, கலவரத்தில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.
மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திங்கள்கிழமை மாநில அளவில் நடைபெற்ற கலவரத்தில் பேருந்து, லாரி உள்ளிட்ட 97 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பெங்களூரில் 44 வாகனங்களும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 59 வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக இதுவரை 335 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்த விடியோ பதிவை ஆராய்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கலவரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 13 இடங்களில் தடியடி நடத்தப்பட்டது. 16 இடங்களில் கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது. 16 காவல் சரகங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டம், கலவரங்களை ஊடகங்கள் மிகைப்படுத்திக் காண்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். திங்கள்கிழமை இரவு மாநிலத்திலிருந்த தமிழகப் பதிவு எண் கொண்ட 300 வாகனங்களை போலீஸாரின் பாதுகாப்பில் தமிழக எல்லை வரை கொண்டு சென்று சேர்த்தோம் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top