வன்முறையாளர்களின் வெறியாட்டத்தில் மென்பொருள் நகரம்

பெங்களூரில் அறிவிக்கப்படாத முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரு, மண்டியா, மைசூரு மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பு கன்னட அமைப்பினரின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் 12 மணி அளவில் கலவரம் வெடித்தது.

1
தமிழகப் பதிவெண் கொண்ட லாரிகள், பேருந்துகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்தக் கலவரங்களைத் தடுக்க காவல்துறையினர் போதுமான அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பெங்களூரு இந்திராநகர், சாந்திநகர், கெங்கேரி, நாகரபாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான உணவகங்கள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட உடைமைகள் சூறையாடப்பட்டன.
தமிழர்களின் வாழ்விடங்களிலும் தமிழர்களை அச்சுறுத்தும் வேலையில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகத் தமிழர்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பெங்களூரு தமிழ்ச்சங்கம் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு அளித்தது. அதைத் தொடர்ந்து, பெங்களூரு தமிழ்ச் சங்கக் கட்டடம், திருவள்ளுவர் சிலை வளாகம், தமிழர்கள் அதிகளவில் வாழும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரில் தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்கள், தமிழர்களுக்குச் சொந்தமான உடைமைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் பரவியதும் ஆங்காங்கே கடையடைப்பு நடந்தது. ஒருசில இடங்களில் கன்னட அமைப்பினர் கட்டாயப்படுத்தி கடைகளை மூடினர்.
சாலையில் வாகனங்களின் நடமாட்டம் நின்று போனது. தமிழகத்திற்கு இயக்கப்பட்ட கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்பட்ட தமிழக வாகனங்கள் எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
மேலும் பெங்களூரில் இயக்கப்பட்டு வந்த பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகத்தின் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
பெங்களூரு மெட்ரோ ரயில்களும் தனது சேவையை முடக்கிக் கொண்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு, தனியார் அலுவலகங்களில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பியோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பெங்களூரில் வாகனங்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் பெங்களூரில் அறிவிக்கப்படாத முழு அடைப்பு நடத்தப்பட்டது போல இருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top