அமெரிக்க ஓபன்: ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார்.

angelik
நியூயார்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் கெர்பர் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவைத் தோற்கடித்தார்.
இதன்மூலம் அமெரிக்க ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள கெர்பர், இந்த சீசனில் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றபோது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் கெர்பர்.
வெற்றி குறித்துப் பேசிய கெர்பர், “ஒரே ஆண்டில் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியிருப்பது வியக்கத்தக்கதாகும். எனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த ஆண்டு மிகச்சிறந்ததாகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஓபனில் முதல்முறையாக களமிறங்கியபோது அரையிறுதி வரை முன்னேறினேன். அதேபோட்டியில் இப்போது சாம்பியன் பட்டம் வென்றிருப்பது வியப்பாக இருக்கிறது’ என்றார்.
புதிய தரவரிசை திங்கள்கிழமை வெளியாகும்போது உலகின் முதல் நிலை வீராங்கனை என்ற பெருமையைப் பெறவுள்ளது குறித்துப் பேசிய கெர்பர், “தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும்; கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும் என இளம் வயதிலேயே கனவு கண்டேன். அது இப்போது நனவாகியிருக்கிது’ என்றார்.
இறுதிச்சுற்று குறித்துப் பேசிய கெர்பர், “பிளிஸ்கோவா கடும் சவால் அளித்தார். 2-ஆவது செட்டில் பின்தங்கியபோது மனதளவில் நெருக்கடிக்கு உள்ளானேன். எனினும் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றதை நினைத்துப் பார்த்தபோது உத்வேகம் கிடைத்தது. அதனால் 3-ஆவது செட்டில் பின்னடைவிலிருந்தபோதும், விரைவாக மீண்டு வெற்றி கண்டேன்’ என்றார்.
பிளிஸ்கோவா, இதற்கு முன்னர் 17 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும், அதில் ஒருமுறைகூட 3-ஆவது சுற்றைத் தாண்டியதில்லை. ஆனால் இந்த முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதோடு மட்டுமின்றி, வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஆகியோரை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகளை வீழ்த்திய 4-ஆவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
இறுதிச்சுற்றில் தோல்வி கண்டது குறித்துப் பேசிய பிளிஸ்கோவா, “இது மிகச்சிறந்த ஆட்டம். இது மிகவும் கடினமான ஆட்டமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாவிட்டாலும், கடந்த 3 வாரங்களாக நான் விளையாடிய விதம் மகிழ்ச்சியளிக்கிறது. வருங்காலத்தில் நடைபெறவுள்ள கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவேன் என நம்புகிறேன். இந்த ஆட்டத்தின் மூலம் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக விளையாடும் ஆற்றல் என்னிடம் இருப்பதை கண்டுகொண்டேன். கெர்பர், உலகின் முதல் நிலை வீராங்கனை என்பதை இந்த ஆட்டத்தின் மூலம் நிரூபித்துவிட்டார். அவருடன் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெüரவம்’ என்றார்.

ஆடவர் இரட்டையர்: முர்ரே-புருனோ ஜோடி சாம்பியன்

ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் ஜேமி முர்ரே-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டா-கார்ஸியா லோபஸ் ஜோடியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டன் வீரர் என்ற பெருமை ஜேமி முர்ரேவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக 1972-இல் தென் ஆப்பிரிக்காவின் கிளிஃப் டிரைஸ்டேலுடன் இணைந்து பிரிட்டனின் ரோஜர் டெய்லர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
186 வாரங்களுக்குப் பிறகு முதலிடத்தை இழக்கும் செரீனா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தரவரிசை திங்கள்கிழமை வெளியாகிறது. அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கெர்பர், தரவரிசையில் அதிகாரப்பூர்வமாக முதலிடத்தைப் பிடிக்கிறார்.
தொடர்ச்சியாக 186 வாரங்கள் முதலிடத்தை தன்வசம் வைத்திருந்த செரீனா, அமெரிக்க ஓபனில் அரையிறுதியோடு வெளியேறியதால் அந்த இடத்தை அதிகாரப்பூர்வமாக இழக்கிறார்.
22 கிரண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான செரீனா, சொந்த மண்ணில் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் தனியாளாக 2-ஆவது இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதியில் பிளிஸ்கோவாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டதால், கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மட்டுமல்ல, முதலிடத்தையும் இழந்திருக்கிறார் செரீனா.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top