அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், கெர்பர் சானியா ஜோடி வெளியேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிசில் ஜோகோவிச், கெர்பர்,வோஸ்னியாக்கி அரைஇறுதிக்கு முன்னேறினர். இந்தியாவின் சானியா ஜோடி கால்இறுதியுடன் வெளியேற்றம்.

mplll
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா), பிரான்சின் சோங்காவுடன் மோதினார். அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது, சோங்கா இடது கால் முட்டி காயத்தால் விலகினார். இதையடுத்து ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க ஓபனில் தொடர்ச்சியாக 10-வது முறையாக ஜோகோவிச் அரைஇறுதியை எட்டினார். நடப்பு தொடரில் மூன்று ஆட்டங்களில் அவருக்கு எதிராக ஆடியவர்கள் காயத்தால் விலகியது கவனிக்கத்தக்கது.

மற்றொரு கால்இறுதியில் பிரான்சின் கேல் மான்பில்ஸ், சக நாட்டவர் லுகாஸ் போவ்லியை சந்தித்தார். போவ்லி, 4-வது சுற்றில் முன்னணி வீரர் ரபெல் நடாலுக்கு ‘தண்ணி’ காட்டியவர் என்பதால் இந்த ஆட்டம் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் போவ்லி 4-6, 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் கேல் மான்பில்சிடம் பணிந்து விட்டார். அமெரிக்க ஓபனில் முதல்முறையாக அரைஇறுதிக்கு வந்திருக்கும் 12-ம் நிலை வீரரான கேல் மான்பில்ஸ், அடுத்து நம்பர் ஒன் நட்சத்திரம் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார். இருவரும் இதுவரை சந்தித்த 12 ஆட்டங்களிலும் ஜோகோவிச்சே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்), 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அனஸ்டசிஜா செவஸ்டோவாவை (லாத்வியா) 65 நிமிடங்களில் ஊதித் தள்ளினார். 2-வது கேமின் போது கீழே விழுந்த செவஸ்டோவாவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. காலில் கட்டுப்போட்டுக் கொண்டு விளையாடினார். இதனால் தான் அவரால் முழு உத்வேகத்துடன் ஆட முடியாமல் போய் விட்டது.

இன்னொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர்(ஜெர்மனி), கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான இத்தாலியின் ராபர்ட்டா வின்சியுடன் மோதினார். தொடக்கத்தில் வின்சி, கெர்பருக்கு கடும் சவால் கொடுத்தார். 5-5 என்று வரை சமனிலை வந்தது. ஆனால் முக்கியமான கட்டத்தில் வின்சி, ‘புட்பால்ட்’ செய்ததால் முதல் செட்டை டை-பிரேக்கருக்கு முன்பாகவே கெர்பர் தனதாக்கினார். 2-வது செட்டில் கெர்பரின் ஆக்ரோஷமான அதிரடி ஷாட்களுக்கு முன்பு, வின்சியால் துளியும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் கெர்பர் 7-5, 6-0 என்ற நேர் செட்டில் வின்சியை விரட்டி அரைஇறுதிக்குள் நுழைந்தார். முதலிடத்தை நோக்கி பயணித்து வரும் கெர்பர் அடுத்து வோஸ்னியாக்கியுடன் மல்லுகட்ட இருக்கிறார்.

பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா – செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 6-7(3-7), 1-6 என்ற நேர் செட் கணக்கில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் கரோலினே கார்சியா- கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) இணையிடம் தோற்று வெளியேறியது.
கடந்த ஆண்டு மார்ட்டினா ஹிங்கிசுடன் கைகோர்த்து வெற்றி மேல் வெற்றிகளை குவித்த சானியா மிர்சா, சமீபத்தில் அவரை விட்டு பிரிந்து ஸ்டிரிகோவாவுடன் கூட்டு சேர்ந்தார். அதன் பிறகு விளையாடிய முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இது தான். சானியாவின் தோல்வியின் மூலம் அமெரிக்க ஓபனில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top