குடிநீர் ஆலையை எதிர்த்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: களக்காட்டில் 62 பேர் கைது

நெல்லை மாவட்டம், களக்காடு பேரூராட்சி 6-வது வார்டு கோவில்பத்தில் தனியார் குடிநீர் ஆலை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஊர்பகுதியில் குடிநீர் ஆலை அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, அப்பகுதியில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என்றும், விவசாயம் பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் குடிநீர் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குடிநீர் ஆலை அமைந்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

62-arrested-try-to-drinking-factory-against-town-panchayat_secvpf

இதையடுத்து போராட்டக் குழு அமைக்கப்பட்டு, தனியார் குடிநீர் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் களக்காடு பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தனியார் குடிநீர் ஆலைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப் போவதாக தகவல்கள் வெளியானது. இதையறிந்த போராட்டக் குழுவினர் களக்காடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து களக்காட்டில் நாங்குநேரி ஏ.எஸ்.பி.சுகுணாசிங் தலைமையில், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சார்லஸ் முன்னிலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பேரூராட்சி அலுவலகம் முன் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையே போராட்டக் குழுவினர் 62 பேர் களக்காடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

பேரூராட்சி அலுவலகம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். அவர்கள் தனியார் குடிநீர் ஆலைக்கு எதிராகவும், ஆலைக்கு ஆதரவாக பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதற்கிடையே களக்காடு பேரூராட்சி கூட்டம் தலைவர் ராஜன் தலைமையில் நடந்தது. இதில் தனியார் குடிநீர் ஆலைக்கு அனுமதி வழங்குவது உள்பட அனைத்து தீர்மானங்களும் கவுன்சிலர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாக பேரூராட்சி தலைவர் ராஜன் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top