அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா சாதனை, சானியா ஜோடியும் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிசில் ஆன்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.

srina

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்துடன் கூடிய அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 8-வது நாளான நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா மணிக்கு அதிகபட்சமாக 126 மைல் வேகத்தில் சர்வீஸ் போட்டதுடன், 11 ஏஸ் சர்வீசும் வீசி அசத்தினார். 68 நிமிடங்களில் எதிராளியின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த செரீனா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

அடுத்து அவர் 5-ம் நிலை வீராங்கனை ருமேனியாவின் சிமோனா ஹாலெப்புடன் மோதுகிறார். இருவரும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அதில் 7-ல் செரீனாவும், ஒன்றில் ஹாலெப்பும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
மற்றொரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 4-6, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் 2 முறை சாம்பியனான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை வெளியேற்றி முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இதே போல் தரவரிசையில் 92-வது இடம் வகிக்கும் அனா கொஞ்ஜூ (குரோஷியா) 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவுக்கு (போலந்து) அதிர்ச்சி அளித்தார். விம்பிள்டன் 2-வது சுற்றில் ராட்வன்ஸ்காவிடம் தோல்வி அடைந்திருந்த கொஞ்ஜூ அதற்கு பழிதீர்த்துக் கொண்டார். இதன் மூலம் 18 வயதான அனா கொஞ்ஜூ தனது கிராண்ட்ஸ்லாம் வாழ்க்கையில் முதல்முறையாக கால்இறுதி சுற்றை அடைந்திருக்கிறார்.
பெண்கள் இரட்டையர் 3-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் நிகோல் கிப்ஸ் (அமெரிக்கா)- நாவ் ஹிபினோ (ஜப்பான்) இணையை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறியது. சானியா-ஸ்டிரிகோவா கூட்டணி கால்இறுதியில் கரோலினா கார்சியா- கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) இணையுடன் மோதுகிறது.

கலப்பு இரட்டையர் கால்இறுதியில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா-கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி (கனடா) இணை போராடி தோற்றது. இந்திய தரப்பில் அமெரிக்க ஓபனில் பங்கேற்ற 4 பேரில் தற்போது சானியா மிர்சா மட்டுமே களத்தில் நீடிக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவை பந்தாடினார்.

சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-4, 6-1, 6-7 (5), 6-3 என்ற செட் கணக்கில் மார்சென்கோவையும் (உக்ரைன்), ஜப்பானின் நிஷிகோரி 6-3, 6-4, 7-6(4) என்ற நேர் செட் கணக்கில் இவா கார்லோவிச்சையும் (குரோஷியா) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். கால்இறுதி ஆட்டங்களில் ஆன்டி முர்ரே- நிஷிகோரி, வாவ்ரிங்கா- ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் மோத உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top